‘ஆபரேஷன் தாமரை’ எதிரொலி: கர்நாடக இந்நாள் முன்னாள் முதல்வர்கள் திடீர் ஆலோசனை

பெங்களூரு:

ர்நாடக மதசார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, பாரதிய ஜனதா ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு வலை வீசி வருகிறது. இதன் காரணமாக தற்போதைய கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி, முன்னாள் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து திடீர் அவசர ஆலோசனை நடத்தினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் தயவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பாஜக முயன்று வருகிறது. இதற்காக  ‘ஆபரேஷன் தாமரை’ என்று பெயரிடப்பட்டு, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள்  சுமார் 20 பேரை வசப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், அந்த  20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடகமுதல்வர் குமாரசாமி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான  சித்தராமையாயை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர். இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் காங்-ஜனதா தளம்  கூட்டணி ஆட்சி நடைபெற்று வரகிறது. முதல்வராக  ஜடிஎஸ் கட்சி தலைவர் குமாரசாமியும், துணைமுதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வராவும் பதவியில் உள்ளனர். இந்த கூட்டணி அமைச்சரவை பதவியேற்று 4 மாதங்களே ஆகி உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரங்களில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையிடுவதாக கூறி ஜார்கிகோளி சகோதரர்கள் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பெலகாவி மாவட்ட காங்கிரஸ் பிரச்சினையில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையிடக்கூடாது, லட்சுமி ஹெப்பால்கருக்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று ஜார்கிகோளி சகோதரர்கள் நிபந்தனை விதித்தனர்.

இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் எழுந்தது. அதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் டில்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அவர்களுக்கு ராகுல்காந்தி சில ஆலோசனை வழங்கினார். அதைத்தொடர்ந்து, ஜார்கிகோளி சகோதரர்களை முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா சமாதானப்படுத்தினார்.

இந்த நிலையில்,  பா.ஜனதாவின் ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் காங்கிரசை சேர்ந்த சுமார் 20 எம்.எல்.ஏ.க்களை இழுக்க பேசி இருப்பதாகவும், விரைவில் அந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த  பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் குமாரசாமியும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வர் சித்தராமையாயும் அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை சித்தராமையா தங்கியுள்ள காவேரி இல்லத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்,  துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே, மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் பாஜக திட்டத்தை முறியடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் குதிரை பேரத்தில் ஈடுபடும் பாஜகவினரை  தடுக்க கோரி சட்டசபை சபாநாயகரிடம் மனு கொடுக்க ஜனதா தளம் (எஸ்) கட்சி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக கர்நாடக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.