ஷிம்லா: ராஜஸ்தானில் நீடித்துவந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததில் தனக்கு பெரிய மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவருமான சாந்த குமார்.

சாந்த குமாரின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில், குறிப்பாக பாரதீய ஜனதா முகாமில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஒரு கட்சியானது ஜனநாயகத்தை கேலிக்குரியதாக ஆக்கிவருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, ஒரு பெரிய அரசியல் சாகசம் என்று இன்றைய நாளில் கருதப்படுகிறது. ஆனால், ராஜஸ்தானில் இந்த முயற்சி தோல்வியடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறியுள்ளார் அவர்.

மத்தியப் பிரதேச பாணியில், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க மத்திய பாரதீய ஜனதா அரசு பெரியளவில் முயன்றது. ஆனால், அம்முயற்சி தோல்வியையே தழுவியது. சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில அசோக் கெலாட் அரசு வென்றது. அதிருப்தியாளர் சச்சின் பைலட் மீண்டும் கட்சியுடன் சமரசமானார்.

இந்நிலையில், பாரதீய ஜனதாவின் தலைவர்(முன்னாள் மக்களவை உறுப்பினர் மற்றும் மாநில முதல்வர்) ஒருவரே, தனது கட்சியின் அரசியல் தில்லாலங்கடி வேலைகளை கண்டித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.