புதுடெல்லி: அகமதாபாத்தின் பெரிய மருத்துவமனைக்கு தரமற்ற சுவாசக் கருவிகளை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ராஜ்கோட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து 5000 வென்ட்டிலேட்டர்களை கொள்முதல் செய்கிறது மத்திய மோடி அரசு.
அந்த நிறுவனத்தின் நடப்பு மற்றும் முன்னாள் விளம்பரதாரர்கள், மூத்த பாரதீய ஜனதா தலைவர்களுடன் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, நரேந்திர மோடிக்கு விலையுயர்ந்த கோட்டை (ஏலத்தில் ரூ.10 லட்சத்திற்கு விலை போன கோட்) பரிசாக வழங்கியதாக கூறப்படும் ஒரு முக்கிய வணிகக் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்தக் கொள்முதல் நடவடிக்கை மாநில அரசு நடத்தும் எச்எல்எல் லைஃப்க‍ேர் மூலமாக நடைபெறுகிறது என்கிறார் குஜராத் மாநில சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர். இந்தக் கொள்முதல் ‘பிஎம் கேர்ஸ்’ நிதியின் மூலம் வாங்கப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு என்றும் கூறப்படுகிறது.
இந்த மாதத்தின் துவக்கத்தில் 50000 இந்தியத் தயாரிப்பு வென்டிலேட்டர் வாங்குவதற்காக, அந்த நிதியிலிருந்து ரூ.2000 கோடி செலவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அகமதாபாத்தில் செயல்படும் ஒரு பெரிய சிவில் மருத்துவமனைக்கு, ஜியோதி சிஎன்சி ஆட்டோமேஷன் லிமிடெட் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான இந்திய தயாரிப்பு(Made in India) வென்ட்டிலேட்டர்கள் தேவையான தரத்தில் இல்லாமல் இருந்தது பெரிய பரபரப்பைக் கிளப்பியதோடு, சர்ச்சையானது. அந்நிறுவனத்தின் தலைவர் பரக்ரம்சின் ஜடேஜா, குஜராத் மாநில பாஜக முதல்வர் விஜயா ரூபானியுடன் நெருக்கமானவராக அறியப்படுபவர்.
ஆனால், ‘டாமன்-1’ என்று அழைக்கப்படும் ஜியோதி சிஎன்சி இயந்திரங்கள், ஒரு சிறப்பான சாதனையாக குஜராத் மாநில அரசால் விளம்பரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த இயந்திரத்தை மிகச் சிறப்பான ஒன்றாக புகழ்ந்து பேசியிருந்தார் அம்மாநில முதல்வர் ரூபானி. ஆனால், அவரின் கருத்தை அம்மாநில அரசு மருத்துவர்கள் ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில், இந்த வென்ட்டிலேட்டர் விஷயத்தில் எந்தளவிற்கு ஊழல் நடந்துள்ளது என்ற கேள்விகள் எட்டுத்திக்கும் எழுந்து நிற்கின்றன.
நன்றி: த வயர் இணையதளம்