புதுடெல்லி:

மேற்கு வங்க மாநிலத்தில் ரத யாத்திரை நடத்த அனுமதிக்கக் கோரி பாஜக தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அனுமதி தருவது குறித்து மேற்குவங்க அரசு முடிவு எடுக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகளில் டிசம்பர் 7 முதல் 14-ம் தேதி வரை பாஜக தேசியத் தலைவர் அமீத்ஷா தலைமையில் ரத யாத்திரையை நடத்த மாநில பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்தது.

சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி, ரத யாத்திரைக்கு மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு அனுமதி மறுத்தது.

இதை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பாஜக தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ரத யாத்திரைக்கு அனுமதி தர உத்தரவிட்டார். எனினும் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், பாஜக மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் ரத யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜக மனு தாக்கல் செய்தது.
அமைதியான முறையிலும், ஜனநாயக முறையிலும் நடத்தவுள்ள இந்த ரத யாத்திரையை தடுத்து நிறுத்தக் கூடாது என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், மாநில அரசின் அச்சம் ஏற்கும் வகையில் இருப்பதாக தெரிவித்தது.

எனினும், ரத யாத்திரைக்கு அனுமதி கொடுப்பது குறித்து மேற்கு வங்க அரசே முடிவு எடுக்கலாம் என்று கூறி, பாஜக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.