சென்னை: பாஜகவின் மதவெறி தமிழ்நாட்டில் எடுபடாது  என்றும், ஐந்து மாநிலங்களிலும் பாஜகவை மக்கள் நிராகரிப்பார்கள் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர்  டி.ராஜா கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற்றது. இதில், பொதுச்செயலாளர்  டி.ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்  பங்கேற்றனர்.

கூட்டத்தில், மறைந்த தா.பாண்டியன் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.  மாநிலக்குழு கூட்டத்தில்,  எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம்  டி.ராஜா தெரிவித்தார்.

அப்போது, மதவெறி அரசியல் செய்யும் பாஜகவை வீழ்த்தவே திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். பாஜகவின் மதவெறி தமிழ்நாட்டில் எடுபடாது என்றும், மோடி அரசை எதிர்த்து பேசுபவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர்.

பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக மற்றும் இதர கட்சிகளை மக்கள் நிராகரிப்பார்கள் என டி.ராஜா கூறினார்.

மத்திய பாஜக அரசு மக்கள் உழைப்பால் காட்டி வளர்க்கப்பட்ட பொதுத்துறை நிறுவங்களை தனியாரிடம் விற்று வருகிறது என தெரிவித்தார்.  பாரதிய ஜனதா கட்சி நீடிப்பது நாட்டுக்கு நல்லது அல்ல; 5 மாநிலங்களில் நடக்கக்கூடிய தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பை மதவெறியை வைத்து அரசியல் செய்யும் பாஜகவை வீழ்த்த வேண்டும்.

“இந்திய அரசமைப்பு சட்டம், ஜனநாயகத்தைக் காக்க 5 மாநில தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மதவெறி பாஜகவின் தோல்வியை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கும்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் உள்ளனர். இந்த கூட்டணியே வெற்றி பெறும். பாஜகவுடன் அணி சேரும் எந்த கட்சியும் மக்களால் நிராகரிக்கப்படும்” என்று கூறினார்.