ரஃபேல் லஞ்சம்!: பாஜக மூத்த தலைவர்களே குற்றம்சாட்டி வழக்கு!

டில்லி

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரணை கோரி பாஜகவின் மூத்த தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டுடன் மத்திய பாஜக அரசு ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் இட்டதில் இருந்தே அது குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த ஒப்பந்தத்தில் பல கோடி ரூபாய் கைமாறி உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதை பாஜக மறுத்த போதிலும் இந்த ஒப்பந்தம் குறித்து எந்த விவரமும் வெளியிடாமல் இருக்கிறது.

இந்நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை பாஜக முன்னாள் அமைச்சர்களான யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் பதிந்துள்ளனர்.

வழக்கு மனுவில், “ரஃபேல் ஒப்பந்தத்தில் பணம் கைமாறி உள்ளதாக சந்தேகம் எழுப்பத் தேவையான காரணங்கள் உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் நாட்டின் மிகப்பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் லஞ்சம் பெற்றிருக்கலாம் என நம்பத்தகுந்த ஆதாரங்கள் உல்ளன. இது குறித்து நாங்கள் சிபிஐ விசாரணை தேவை என கடந்த 4 ஆம் தேதி கொடுத்த மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பிரஞ்சு நிறுவனத்திடம் இருந்து பறக்க தயாரான நிலையில் 36 விமானங்கள் வாங்க உள்ளதாக அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்தது. ஆனால் தற்போது இதற்கான பல பணிகளை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு லாபம் அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.