புதுடெல்லி: கடந்த 2016 – 2018ம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும், அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட கார்பரேட் நிதியில் மொத்தமாக 92.94% அளவை அள்ளிக்கொண்டுள்ளது பாரதீய ஜனதா கட்சி.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது; 2016 மற்றும் 2018க்கு இடைபட்ட 2 ஆண்டு காலகட்டத்தில் மட்டும் மொத்தம் ரூ.915.596 கோடியை கார்பரேட் நன்கொடையாகப் பெற்றுள்ளது பாரதீய ஜனதா கட்சி. அந்த நன்கொடையை அளித்த கார்பரேட் நிறுவனங்களின் எண்ணிக்கை 1731.

அதாவது, அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் கார்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு அளித்த மொத்த நன்கொடையின் மதிப்பு ரூ.985.18 கோடிகள். ஆக, பாரதீய ஜனதாவின் பங்கு கிட்டத்தட்ட 93%.

இதற்கடுத்ததாக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையின் அளவு ரூ.55.36 கோடி. இந்த தொகையை சுமார் 151 கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளது காங்கிரஸ். அதாவது மொத்த தொகையில் வெறும் 5.6% மட்டுமே.
மூன்றாவது இடத்தில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வருகிறது. அந்தக் கட்சிப் பெற்ற தொகை ரூ.7.73 கோடி. அதாவது, மொத்த தொகையில் 0.78% மட்டுமே.

ஆனால், 2018-19 ஆண்டு காலகட்டம் இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், அந்த காலகட்டத்தில்தான், அரசியல் கட்சிகள் கார்பரேட் நிதியைப் பெறுவதற்கு வசதியாக பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.