சேலத்தில் பெரியார் பேரணி நடத்திய அதே நாளான இன்று பாஜக ஆன்மிக பேரணி! பரபரப்பு

சேலம்:

சேலத்தில் பெரியார் நடத்திய அதே நாளான இன்று, அதே இடத்தில் பாஜக தடையை மீறி ஆன்மிக பேரணி நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

துக்ளக் பொன்விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, 1971ம் ஆண்டு ஜனவரி 24ந்தேதி அன்று பெரியார் நடத்திய சமூகநீதி பேரணியில் ராமர் சீதை உருவப்படங்களை செருப்பால் அடித்த நிகழ்வை நினைவு கூர்ந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திராவிடக் கட்சிகள் குரல் எழுப்ப, மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி எதிர்குரல் எழுப்ப தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக பாஜக உள்பட இந்துத்துவா அமைப்புகள் பெரியாரின் கருததுக்கு  எதிராக களத்தில் குதித்துள்ளன.

அதைத்தொடர்ந்து, ஜனவரி 24ந்தேதியான இன்று, பெரியார் தலைமையில் சேலத்தில் பேரணி நடைபெற்ற அதே இடத்தில் பாஜக ராமர் சீதை உருவப்படங்களுடன் ஆன்மிக பேரணி நடத்த அனுமதி கோரியது. ஆனால், அதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பேரணி நடைபெற்றது. ஒரு கட்டத்தில் பேரணியை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியதைத் தொடர்ந்து பேரணியில் கலந்துகொண்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்த அப்புறப்படுத்தினர்.

கார்ட்டூன் கேலரி