டில்லி

கோட்சே பற்றி புகழ்ந்த\ சாத்வி பிரக்ஞா தாகுருக்கு விளக்கம் அளிக்க பாஜக தலைமை அளித்த 10 நாள் கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளது

தற்போது மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள சாத்வி பிரக்ஞா தாகுர் தேர்தல் நேரத்தில் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை ஒரு தேச பக்தர் எனபுகழ்ந்தார். இதை ஒட்டி கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் மன்னிப்பு கோரினார். அத்துடன் அவருக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விளக்கம் கோரி நோட்டிஸ் அனுபினார்.

அந்த நோட்டிஸில் சாத்வி பிரக்ஞா தாகுர் 10 நாட்களுக்குள் கோட்சேவை புகழ்ந்ததற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அமித்ஷா குறிப்பிட்டார். இதை போலவே கோட்சேவை புகழ்ந்து பேசிய அனந்தகுமார் ஹெக்டே மற்றும் நளின் காடில் ஆகியோருக்கும் 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அமித்ஷா நோட்டிஸ் அனுப்பினார்.

இந்த 10 நாள் கெடு மே மாதம் 27 ஆம்தேதி அதாவது நேற்றுடன் முடிவடைந்துள்ளது. ஆனால் பாஜக தலைமை இதுவரை இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

இது குறித்து போபால் தொகுதியின் முன்னாள் மகக்ளவை உறுப்பினர் அலோக் சஞ்சார், “தற்போது இந்த விவகாரம் கட்சியின் மத்திய தலைமை மற்றும் சாத்விக்கு இடையில் உள்ளது. அவர் ஏற்கனவே தேர்தல் நேரத்தில் மன்னிப்பு கேட்டு விட்டார்” என தெரிவித்துள்ளார்,

பாஜகவின் மற்ற முக்கிய தலைவர்களான உமாசங்கர் குப்தா உள்ளிட்டோரும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் சாத்வி மீது எடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர். கட்சியின் தலைமை அலுவலக அதிகாரிகள் இது குறித்து எவ்வித விளக்கம் கூறவும் மறுத்துள்ளனர்.