கிராமப்புற வீடுகளுக்கு இலவச காஸ் இணைப்பை வழங்குகின்ற உஜ்வாலா திட்டத்தின் பயனாளர்களில் மிகப்பெரும்பான்மையோர், இன்னும் விறகு அடுப்புகளையே பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய பாரதீய ஜனதா அரசால் மார்தட்டிக் கொள்ளப்படும் திட்டங்களுள் ஒன்று உஜ்வாலா. கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறையை இத்திட்டம் மாற்றிவிட்டதாக அவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இத்திட்டத்தின் மூலம், அடுப்பு புகையை சுவாசிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இத்திட்டம் குறித்து ஒரு ஆராய்ச்சி நிறுவனம், பீகார், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில கிராமப்புறங்களில் நடத்திய ஆய்வில், அத்திட்டப் பயனாளர்களில் 85% பேர், சமையலுக்கு விறகு மற்றும் வறட்டி போன்றவைகளையே பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

காலியான காஸ் சிலிண்டரை மறுபடியும் நிரப்புவதற்கு ஆகும் அதிக செலவினம் மற்றும் பாலின பாகுபாடு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாய் இருக்கின்றனவாம்.

மேலும், விறகு மற்றும் சாண எரிபொருளை சேகரிப்பது மக்களுக்கு செலவற்ற ஒன்றாக இருப்பதோடு, சில பொருட்களை விறகடுப்பில் சமைப்பது சுவையாக இருப்பதாக கருவதுவதும் காரணிகளாய் உள்ளன.

எனவே, சமையல் எரிவாயு மானியத்தை அதிகரிப்பது மற்றும் தொடர் கண்காணிப்பு போன்றவை நிலைமையை சீராக்கும் என்று தெரிவிக்கின்றனர் ஆய்வை நடத்தியவர்கள்.

– மதுரை மாயாண்டி