புதுடெல்லி: சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குதல் மற்றும் விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவதைக் காணும்போது வெட்கமாக உணர்வதாக கூறியுள்ளார் இமாச்சலப் பிரதேச பாஜக முன்னாள் முதல்வர் சாந்த குமார்.

தனது சுயசரிதைப் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ள அவர், இந்த விஷயத்தை அதில் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், சமீபத்தில் நடந்துமுடிந்த புதுச்சேரி சம்பவத்தைக் குறிப்பிடாமல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் எனது கட்சி ஈடுபடுவதை நினைத்து வெட்கப்படுகிறேன். அதன் கொள்கை மற்றும் தரத்தை வைத்து, உலகிலேயே பெரிய கட்சியாக பாஜகவை மக்கள் மாற்றியுள்ளார்கள்.

ஆனால், தற்போது அது அதிகாரத்திற்கு அலையும் கட்சியாக மாறிவிட்டது. தர-அடிப்படையிலான அரசியலின் மூலமே சமூக மாற்றம் ஏற்படும். நான் கொள்கை அடிப்படையிலான அரசியலைப் பின்பற்றியவன். அந்த வகையில், இந்தியாவின் அரசியலை மாற்றும் அதிகாரம் பெற்ற எனது கட்சி, கொள்கை அடிப்படையிலான அரசியலிலிருந்து விலகிடக்கூடாது என்று விரும்புகிறேன்.

மோடி அரசிடம் பெரியளவில் பெரும்பான்மை உள்ளது. எனவே, அரசியலை சீர்குலைக்கும் கருப்புப் பணத்தை தடைசெய்யும் சட்டத்தை அவர் கொண்டுவர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் சாந்தகுமார்.