தடையை மீறி தொடங்கியது பாஜகவின் ‘வெற்றிவேல் யாத்திரை’…

திருத்தணி: தமிழக பாஜக நடத்தும் வெற்றிவேல் யாத்திரை தொடங்க திருவள்ளூர் கலெக்டர் தடை போட்டிருந்த நிலையில், தடையைமீறி வெற்றிவேல் யாத்திரை தொடங்கப்பட்டு உள்ளது.

தமிழ்க்கடவுள் முருகன் குறித்து கறுப்பர் கூட்டம் வெளியிட்ட அவதூறு வீடியோ தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அது தொடர்பான விவாதங்கள், கருத்து மோதல்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய, கருப்பர் கூட்டத்தினர், அவர்களின் பின்னால் உள்ளவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி,  தமிழக பா.ஜ.க., தலைவர் எல்.முருகன்  ‘வெற்றிவேல் யாத்திரை’ மேற்கொள்ள போவதாக அறிவித்த்தார்.

அதன்படி,  யாத்திரை  இன்று (வெள்ளிக்கிழமை) திருத்தணியில் தொடங்கி, டிசம்பர் 6-ந்தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் யாத்திரையை முடிப்பதாக அறிவிக்கப்பட்டது.  ஆனால், யாத்திரைக்கு, தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.  பா.ஜ.க. அறிவித்துள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில்  தமிழக அரசு தகவல் தெரிவித்தது.  அதைத்தொடர்ந்து நேற்று மாலை, திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்க பாஜகவுக்கு அனுமதி இல்லை என திருவள்ளூர் காவல்துறை அறிவித்தது.

இந்த நிலையில், வெற்றிவேல் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும்எ ன அறிவித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், இன்று காலை திருத்தணி வந்தார்.  அவருடன் ஆயிரக்கணக்கான பாஜகவினர் அணி சேர்ந்தனர்.  அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது,  கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை, அதன் அடிப்படையிலேயே திருத்தணிக்கு வந்தேன், என்னை யாரும் தடுக்க முடியாது என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து வெற்றிவேல யாத்திரை தொடங்கியது.

இதற்கிடையில், வெற்றிவேல் யாத்திரையை தடை செய்தால்,  மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக  நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை  அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையில் சர்ச்சை புகழ் எச்.ராஜா, வெற்றிவேல் யாத்திரைக்கு  காவல்துறை அனுமதி மறுத்தால் போராட்டம் நடைபெறும் எனவும்  இந்துக்களை இகழ்வாக பேசும் ஸ்டாலின் போன்றவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவே வேல்யாத்திரை என தெரிவித்துள்ளார்.

அதுபோல பாஜக பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி கூறும்போது,  வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது. நிபந்தனைகளுக்குட்பட்டுதான் வேல் யாத்திரையை பாஜக நடத்துகிறது என்று கூறினார்.