டில்லி

பாஜகவின் தவறான அரசியல் நடவடிக்கைகளால் பல நிறுவனங்கள் திவாலாகி உள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சுற்றரிக்கை அளித்தது. அந்த சுற்றரிக்கையின் படி வங்கிகளில் கடன் வாங்கி செலுத்தாத நிறுவனங்கள் மீது திவால் சட்டத்தின் கீழ் அதே வருடம் மார்ச் 1 முதல் 180 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு நிறுவனம் 180 நாட்கள் கடனை திருப்பி செலுத்தாவிட்டால் திவாலானதாக கருத முடியாது என தீர்ப்பளித்து ரிசர்வ் வங்கியின் சுற்றரிக்கையை ரத்து செய்தது. இது ரிசர்வ் வங்கிக்கும் ஆளும் பாஜகவுக்கும் பெருத்த அடி என பல பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

இன்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப சிதம்பரம், “பாஜக கொண்டு வந்த பல தவறான அரசியல் நடவடிக்கைகளால் நிலக்கரி, ஸ்டீல், மற்றும் மின் உற்பத்தி உள்ளிட்ட பல நிறுவனங்களின் முதுகெலும்பு உடைந்துள்ளது. அரசின் இத்தகைய தவறான அணுகுமுறையால் பல நிறுவனங்கள் திவாலாகும் நிலைக்கு தள்ளபட்டுள்ளது.

இதை உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு உறுதி படுத்தி உள்ளது. நிறுவனங்களை பழிவாங்கும் மனப்பான்மையுடன் அரசு நடந்துக் கொள்கிறது. இது பெரிய முதலைகளை தப்பிக்க விட்டு சிறு மீன்களை பிடிக்கும் செயலாகும். காங்கிரசின் தேர்தல் அறிக்கை பாஜகவின் இந்த தவறுகள் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.