டில்லி:

மித்ஷா வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயாவின் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட மறுத்ததற்கு  மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற வரலாற்றில் இன்றைய தினம் கருப்பு நாள் என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட சோராபுதீன் என்கவுன்டர் விவகாரத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து  விசாரித்து வந்த நீதிபதி பி.எச்.லோயா மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.  அதைத்தொடர்ந்து அவரது பதவிக்கு நியமிக்கப்பட்ட நீதிபதி, அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுவித்தார்.

இது நாடு முழுவதும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து  லோயா மரணம் இயற்கையானது அல்ல என்று கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கலானது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, அறிக்கை தாக்கல் செய்யும்படி மகாராஷ்டிர மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு இன்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபத தீபக் மிஸ்ரா, நீதிபதிகள்  ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.  நீதிபதி லோயா மரணம் தொடர்பான இதுவரை நடைபெற்ற விசாரணையில் சந்தேகம் ஏதும் இல்லை. எனவே சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டிய தேவை எதுவும் இல்லை. இதுதொடர்பாக தாக்கல் ஆன அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என கூறியிருந்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்,  “ உச்ச நீதிமன்ற வரலாற்றில் இன்றைய தினம் கருப்பு நாள். நீதிமன்றத்தின் தீர்ப்பு கடுமையான அதிருப்தியை தந்துள்ளது” என்றார்.

நீதிபதி லோயா மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை கோரி மனுதாக்க்ல செய்தவர்களில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.