ஈரோடு:
3 நாள் சுற்றுப்பயணமாக கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஈரோடு வரும்போது, அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும் என்று ஈரோடு விவசாயிகள் சங்கம் அறிவித்து உள்ளது.
மத்திய அரசு கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் பேங்க் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து, 17 ம் தேதி ஈரோடு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கருப்பு கொடி காட்டி கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது சம்பந்தமாக அச்சங்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் சுப்பு கூறியதாவது,
“தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன், நகை கடன் உள்ளிட்ட அனைத்து வகை கடன்களும் வழங்குவதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு வாய் மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.
விவசாயிகளின் வைப்புத்தொகையில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளை முடக்க அரசு முயற்சிப்பதாக வலுவான சந்தேகம் எழுந்துள்ளது.

கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு ஆடிபட்டம் தேடி விதை என்பதை போல பயிர் சாகுபடிக் கான நேரம் தொடங்கிய நிலையில் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. ஏற்கனவே கொரனோ ஊரடங்கால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பயிர் சாகுபடிக்கு உரம், பூச்சிகொல்லி, விவசாய இடுபொருட்களை வாங்க முடியாமல், விவசாயி கள் அடுத்தடுத்த சாகுபடியை தொடங்க முடியாத அவல நிலை ஏற்படும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 17 ம் தேதி ஈரோடு வரும் போது அவருக்கு கருப்பு கொடி காட்டி கன்டன போராட்டம் நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.அதே நாளில் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டி மொத்த எதிப்பையும் வெளிப்படுத்துவோம். சிறு குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளையே நம்பி உள்ள நிலையில், கொரனோ காலத்தில், அரசின் இந்த முடிவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாக உள்ளது. முதலமைச்சர் ஈரோடு வருவதற்கு முன்பாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்”
இவ்வாறு கூறியுள்ளார்.