மைல் கற்களில் இந்தி மொழியில் ஊர் பெயரை எழுத வேண்டும் என உத்தரவிட்டது திமுகதான். அக்கட்சியினர், தங்கள் முகத்தில் கறுப்பு மையை பூசிக்கொள்ளட்டும்” என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம், “தமிழகத்தில் நெடுஞ்சாலை மைல் கற்களில் ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியில் ஊர் பெயர்கள் எழுதப்படுவது குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பொன்.ராதாகிருஷ்ணன், “வட இந்தியாவில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு ஆங்கிலம் புரிவதில்லை. அவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காகவே இந்தியில் எழுதப்படுகிறது” என்று பதில் அளித்தார்.

“மேற்கு வங்காளம் போன்ற இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து வரும் ஓட்டுனர்களுக்கு இந்தி புரியாது. ஆகவே ஆங்கிலத்திலேயே இருந்திருக்கலாமே” என்று கேட்கப்பட்டது. உனே ஆத்திரமான பொன்.ராதாகிருஷ்ணன், “இந்த உத்தரவு, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு அமைச்சராக இருந்தபோதுதான் பிறப்பிக்கப்பட்டது. ஆகவே அவர்களைப்போய் கேளுங்கள்” என்று காட்டமாகச் சொன்னார்.

மேலும், “இந்த உத்தரவுக்குக் காரணமான கட்சிதான், தற்போது மைல் கற்களில் இந்தியை அழிப்போம் என்று தார் டின்னுடன் கிளம்புகிறார்கள். அவர்கள் ஏன் மைல் கற்களில் கறுப்பு மை பூச வேண்டும்? தங்கள் முகத்தில் பூசிக்கொள்ளட்டும்” என்று உரத்த குரலில் சொல்லிவிட்டு கிளம்பினார்.

மத்திய அமைச்சர் ஒருவர், ஒரு குறிப்பிட்ட கட்சியினரைப் பற்றி இப்படிப் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.