சென்னையைச் சேர்ந்தவர் சஹானா என்ற பார்வை மாற்றுத்திறனாளி.
10 வயது சஹானா இசையில் பல சாதனைகளைப் படைத்து பார்க்கும் அனைவரையும் வியக்க வைக்கிறார். பிறந்தபோதே பார்வையில்லாமல் பிறந்தவர் சஹானா. அவருடைய பெற்றோர் பல மருத்துவர்களிடம் காண்பித்தும் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்ட நிலையில் இக்குறைபாடு களையப்பட வாய்ப்பில்லை என்பதறிந்து அவரின் பெற்றோர் சஹானாவின் கவனம் முழுவதையும் இசையின் மீது திருப்பினார்கள். நான்கு வயது முதல் முறைப்படி பியானோ கற்று வரும் சஹானா அருமையாகப் பாடவும் செய்கிறார்.
Blind Musician who melted AR Rahman ..தன்னுடைய இசைத்திறமையால் பலருடைய பாராட்டுகளையும் பெற்று வரும் இவர், பல மேடைக் கச்சேரிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு கீ போர்டுகளை இசையமைத்து அசத்துவதுடன், அந்த இரண்டு கீ போர்டுகளிலும் இரு வேறு பாடல்களுக்கு இசையமைத்தும் அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறார். ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சஹாவின் இந்த சாதனை இடம்பெற்றுள்ளது. எந்தப் பாடலையும் மூன்று நான்கு முறை கேட்டாலே உடனே அதை நோட்ஸ் எடுத்து வாசிக்கும் அளவுக்குத் திறமைசாலியாக உள்ளார்.
சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் “கோப்ரா” படத்தின் “தும்பி துள்ளல்” எனும் பாடல் வெளியானது. இப்பாடலை கீ போர்டில் வாசித்து அதன் விடியோவை ட்விட்டரில் வெளியிட்டிருந் தார் சஹானா. இதைப் பார்த்த ஏ.ஆர். ரஹ்மான், சஹானாவுக்கு மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அத்துடன் கோப்ரா படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், சஹானாவின் திறமையைப் பாராட்டி ஒரு அட்வான்ஸ்டு ஆடியோ சிஸ்டம் தொடர்பான பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.
இறைவன் இவரின் பார்வையை இருட்டில் வைத்துவிட்டாலும் இசைத்திறன் என்னும் புதிய வெளிச்சத்தினை அளித்து இவரை மாபெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆக்கியிருப்பதும் சஹானாவின் பெற்றோருக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியே.
– லெட்சுமி பிரியா