ரத்த தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு: பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு

சண்டிகர்:

ரத்த தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்கவுள்ளதாக, பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.


பஞ்சாப் மாநிலத்தில் கேப்டன் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மக்கள் நலத் திட்டங்களில் பல்வேறு சலுகைகளை அம்மாநில அரசு அறிவித்து நடைமுறைப் படுத்தி வருகிறது.

இந்நிலையில், ரத்த தானம் கொடுப்பதை அரசு ஊழியர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் நடவடிக்கையிலும் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.

தற்போதைய அரசு விதிகளின்படி, அரசுப் பணியில் உள்ளவர்கள் ரத்த தானம் கொடுக்கச் சென்றால், அன்றையதினம் தற்செயல் விடுப்பாகக் கருதப்படுகிறது.

இந்த விதியில் மாற்றம் செய்து, தன்னார்வ அடிப்படையில் ரத்த தானம் செய்யச் செல்லும் தினத்தை, சம்பளத்துடன் கூடிய விடுப்பாக அளிக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.

அரசு ஊழியர்களிடையே ரத்த தானத்தை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.