பிரஸ்ஸல்ஸ் :

றந்து போன பேராசிரியர் மற்றும் செயலற்ற அமைப்புகள் பல பிரதமர் மோடியையும் பா.ஜ.க. அரசையும் புகழும் மிகப்பெரிய பொய் பிரசார வலையம் ஒன்று வெளிநாட்டில் சிக்கியது.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸை தளமாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனின் ‘டிஸ்இன்போலேப்’என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து விரிவாக கூறியுள்ளது, மேலும் இது ஐரோப்பிய நாடுகள் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பொய் பிரச்சாரம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

15 ஆண்டுகளாக 750 க்கும் மேற்பட்ட போலி ஊடகங்கள், உலகளாவிய பொய் மற்றும் தவறான தகவல் பிரச்சாரத்தில், பயன்படுத்தப்பட்டிருப்பது இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. 2006 ம் ஆண்டு தனது 92 வயதில் இறந்து போன பேராசிரியரும், சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் ஸ்தாபகத் தந்தையர்களில் ஒருவராகக் கருதப்பட்ட லூயிஸ் ஷோன் என்பவரது பெயரையும் இந்த பிரச்சாரத்தில் பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

போலி செய்தி நிறுவனங்கள் என்று கண்டறியப்பட்டவற்றில் சில

இந்திய செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. (ஏசியா நியூஸ் இன்டர்நேஷனல்) மற்றும் ஸ்ரீவஸ்தவா குழுமம் ஆகியவை பா.ஜ.க. புகழ்பாடும் இந்த பொய் பிரச்சாரத்தில் முக்கிய ஏஜெண்டுகளாக செயல்பட்டுள்ளது.

2019 ம் ஆண்டு காஷ்மீரில் ஆய்வு செய்ய வந்த வலது சாரி சிந்தனை கொண்ட, ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துவந்த போதுதான் ஸ்ரீவஸ்தவா குழும செயல்பாடுகள் இந்தியாவில் முதல்முறையாக வெளிச்சத்திற்கு வந்தது.

“இந்தியன் க்ரோனிகல்ஸ்” என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் இந்த  அறிக்கையை, பிரான்சில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கொண்டு பிரத்யேகமாக செயல்படும் ‘லெஸ் ஜோர்ஸ்’  என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

“2016 தேர்தலின் போது அமெரிக்காவில் ரஷ்யா மேற்கொண்ட பொய் பிரச்சாரத்தை அடிப்படையாக கொண்டு, இந்த நிறுவனங்கள் தங்களது  பிரச்சார வலையை பின்னியிருக்கின்றன” என்று பொய் பிரச்சாரங்கள் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் நிபுணரை மேற்கோள் காட்டி ‘லெஸ் ஜோர்ஸ்’ கூறியுள்ளது.

உலகின் 116 நாடுகளில் செயல்படும் 400-க்கும் மேற்பட்ட, ஸ்ரீவஸ்தவா குழும போலி வலைத்தளங்களில் பதியப்படும், இந்திய ஆதரவு நிலை மற்றும் சீனா, பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரங்களை கொண்டு, ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை எப்படி இந்தியாவுக்கு அழைத்துவந்தது என்பதை ‘டிஸ்இன்போலேப்’ அறிக்கை விவரிக்கிறது.

ஸ்ரீவஸ்தவா குழுமம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால்  நடத்தப்படும் போலியான செய்தி வலைத்தளங்களில் பதியப்படும் இந்த செய்திகளை; எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளாமல்,ஐரோப்பிய செய்தி நிறுவனங்களில் வந்த செய்தி என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுவந்தது. இவ்வாறு வெளியான ஏ.என்.ஐ. செய்தியை மேற்கோள் காட்டி இந்திய செய்தி நிறுவனங்கள் பலவும் அந்த செய்தியை அப்படியே  பதிவிட்டன.

இந்த மொத்த நடவடிக்கையும் இந்திய உளவுத்துறையின் புரிதலுடனே நடைபெற்றிருப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கும்  லெஸ் ஜோர்ஸ், இந்த செய்திகளின் அடிப்படையிலேயே ஐரோப்பிய பாராளுமன்ற குழு இந்தியா வந்ததாக தெரிவித்துள்ளது.

மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் அறிக்கைகளை பெறுவதற்கு ஐரோப்பிய தலைவர்களை இந்த குழுவினர் அடிக்கடி சந்திதித்திருக்கிறார்கள்  என்று ‘டிஸ்இன்போலேப்’ கூறுகிறது.

அந்த அறிக்கையில் , 2019 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, பாகிஸ்தானில் இந்திய இராணுவம் மேற்கொண்ட ‘சர்ஜிக்கல் தாக்குதல்’ பற்றிய செய்தியை  இதற்கு உதாரணமாக கூறியுள்ளது.

மேலும், ஸ்ரீவஸ்தவா குழுமத்தால் நடத்தப்படும் போலி வலைத்தளமான ஈ.பி. டுடே-வில், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான ரைஸ்ஸார்ட் ஸார்னெக்கி ‘சர்ஜிக்கல் தாக்குதலு’க்கு ஆதரவாக எழுதியதையும் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம், இது ஐரோப்பிய யூனியனால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட செய்தி என்று ‘திரித்து’ வெளியிட்டு தன் பங்கிற்கு மோடிக்கு ஆதர வை தெரிவித்தது.

பிரதமர் மோடியை சந்தித்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு

ஏ.என்.ஐ. வெளியிட்ட இந்த தவறான தகவலுடன் எக்கனாமிக் டைம்ஸ் உள்ளிட்ட முக்கிய செய்தி நிறுவனங்கள் இதே தகவலை வெளியிட, அது கோடிக்கணக்கான இந்தியர்களின் மத்தியில் பவனி வந்தது.

20 ஆம் நூற்றாண்டின் முன்னணி சர்வதேச சட்ட அறிஞர்களில் ஒருவரும், 39 ஆண்டுகளாக ஹார்வர்ட் சட்ட ஆசிரிய உறுப்பினருமான – லூயிஸ் ஷோன் என்ற பெயரில் 2007 ம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் சி.எஸ்.ஓ.பி. சார்பாக பங்கேற்று இந்தியாவிற்கு ஆதரவாக பேசியதாகவும் மேலும் 2011 ம் ஆண்டு வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியதாகவும் கூறியிருந்தது.

உண்மையில், பேராசிரியர் லூயிஸ் ஷோன் 2006 ம் ஆண்டே தனது 92 வது வயதில் இறந்து விட்டார் என்ற அதிர்ச்சி தகவலை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

லூயிஸ் ஷோன்

அமைதி குறித்து ஆய்வு நடத்தும் ஆணையமான  சி.எஸ்.ஓ.பி. என்ற மேற்கூறிய அமைப்பு 1930 ம் ஆண்டே தொடங்கப்பட்டு 1975 ம் ஆண்டு ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்றது. இருந்த போதும், 1970 க்கு பிறகு சி.எஸ்.ஓ.பி. ஒரு செயலற்ற அமைப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல், இறந்தவர்களின் பெயர்களிலும் செயலற்ற அமைப்புகளின் பெயர்களிலும் தவறான மற்றும் பொய் பிரச்சாரம் செய்வதையே நோக்கமாக கொண்டு செயல்படும் ஸ்ரீவஸ்தவா குழுமம் 2005 ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டது என்பதும், தற்போதுவரை 400 க்கும் மேற்பட்ட போலி இணையதளங்கள் ஸ்ரீவஸ்தவா மற்றும் அவரது நிறுவனங்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருவது அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக உள்ளது.

மிகைப்படுத்தப்பட்ட, தவறான, பொய் பிரசாரங்கள் என்பது உலகின் பல்வேறு நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கை தான் என்றபோதும், கடந்த 15 ஆண்டுகளில் கண்டிராத, குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றுள்ள ஒரு மிகப்பெரிய பொய் பிரசார வலையத்தை தாங்கள் இப்போதுதான் பார்த்திருப்பதாக இந்த அறிக்கையில் ‘லெஸ் ஜோர்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.

சீனாவோ, ரஷ்யாவோ தனது நாட்டு உளவுத்துறை மூலம் மேற்கொள்ளும் பிரச்சாரங்களை உலகநாடுகள் எப்படி பார்க்கிறதோ, அப்படித்தான் இந்தியாவையும் மோடி அரசின் இந்த தவறான பிரசாரங்களை கொண்டு பார்க்கிறது என்பது வேதனையளிக்கும் உண்மை.

– நன்றி : பி.பி.சி., கேரவன் மகசின்