தீ ஆபத்து: பத்து லட்சம் கார்களை திரும்பப்பெறுகிறது பி.எம்.டபிள்யூ 

தீப்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறி பத்து லட்சத்துக்கும் அதிகமான டீசல் கார்களை திரும்பப்பெற இருப்பதாக பி.எம்.டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது.

சொகுசு கார்களில் மிகவும் விலையுயர்ந்தது பி.எம்.டபிள்யூ. கார்கள். அவசியம் என்பதை மீறி பி.எம்.டபிள்யூ. கார்களை வைத்திருந்தால் மதிப்பு என்கிற சூழல் நிலவுகிறது.

இந்த நிறுவனம் ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள முனிச் என்ற நகரத்தை மையமாக கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனத்தில்  பல  மாடல்கள் கார் பிரியர்களால் மிகவும் விரும்பப்படுபவை.

இந்த நிலையில் பி.எம்.டபிள்யூ நிறுவனம் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறி பத்து லட்சத்துக்கும் அதிகமான டீசல் கார்களை திரும்பப்பெற போவதாக அறிவித்துள்ளது

சில டீசல் கார்களின் புகைபோக்கிக்கான கூலிங் திரவம் வடிவமைப்புக்கு மாறாக வெளியாவதால் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், “கார் உரிமையாளர்களை தொடர்புகொண்டு பிரச்னை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.   கார்களை சோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறோம்.  கார்களின் பாதிப்புக்குள்ளான குறிப்பிட்ட பகுதி முழுவதும் சோதனை செய்யப்படும். பழுதான பாகங்கள் உடனடியாக நீக்கப்பட்டு வேறு பாகங்கள் பொருத்தி தரப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே பிரச்னையால் ஆகஸ்ட் மாதத்தில் ஐரோப்பா மற்றும் சில ஆசிய நாடுகளில் 4 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான டீசல் கார்களை திரும்ப பெற்றுள்ளதாகவும். உலக அளவில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான டீசல் கார்கள் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறி திரும்ப பெறப்பட இருப்பதாகவும் பி.எம்.டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது

இந்த வருடத்தில் தெற்கு கொரியாவில் 30 கார்கள் தீப்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.