அர்ஜெண்டினா தோல்வி: தற்கொலை செய்து கொண்ட கால்பந்து ரசிகர் உடல் மீட்பு

திருவனந்தபுரம்:

ஃபிஃபா 2018 ரஷ்யாவில் நடந்து வருகிறது. உலகளவிலான கால்பந்து ரசிகர்கள் இப்போட்டியை ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 21ம் தேதி அர்ஜெண்டினா, குரோஷியா அணிகள் மோதிய போட்டி நடந்தது.

இதில் மிகவும் புகழ்பெற்ற அர்ஜெண்டினா அணி படு தோல்வியை தழுவியது. 3&0 என்ற கணக்கில் குரோஷியா வெற்றி பெற்றது. இது உலகளவில் உள்ள ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி ரசிகர்களை பெரும் கவலை அடைய செய்தது.

இந்த வகையில் அதிர்ச்சியடைந்த கேரளா கோழிக்கோடு மாவட்டம் அருமண்ணூரை சேர்ந்த தினு அலெக்ஸ் (வயது 30) என்ற மெஸ்ஸியின் ரசிகர் தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடல் சொந்த ஊரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள மீனாச்சில் ஆற்றின் லிக்கல் பாலத்தின் அருகே இருந்து மீட்கப்பட்டது. அவரது உடலை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர். கால்பந்து ரசிகரின் இந்த விபரீத முடிவு கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.