31 ஆண்டுக்கு முன் காணாமல்போன ரஷ்ய வீரர் உடல் பனிமலையில் கண்டுபிடிப்பு

மாஸ்கோ:

31 ஆண்டுகளுக்கு முன்பு மலையேறச் சென்ற ரஷ்ய வீரர் ஒருவரின் உடல் தற்போது பனிமலையில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. பனிக்குள் சிக்கி இறந்த அவரது உடல், பனியால் சூழப்பட்டு  மெழுகு பொம்மை போல மாறி உள்ள நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 1987ம் ஆண்டு  எலனா பஷிகினா (Elena Bazykina) என்பவர் தன்னுடன் மேலும் 6 பேருடன் இணைந்து மலை யேறச் சென்றார்.  அப்போது எதிர்பாராத வகையில் பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்குண்ட அவர்கள் அனை வரும் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் 31 ஆண்டுகளுக்கு பிறகு எலனா பஷிகினா (Elena Bazykina) என்ற வீரரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடல்  மெழுகு சிலை போல உறைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள  மிக உயர்ந்த மலையான எல்பிரஸ் பனிமலை தெற்கு ரஷ்யாவில் உள்ளது. இந்த மலையில் உலகம் முழுவதும் இருந்து மலையேற்ற வீரர்கள் மலையேறுவது வழக்கம்.

இந்த நிலையில், சமீபத்தில் எல்பிரஸ் மலைக்கு சுற்றுலா பயணிகள் குழுவொன்று மலையேறியது. அப்போது அவர்கள் பனியில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் உடலை கண்டு மீட்டனர். அதுகுறித்து விசாரித்தபோது, அந்த உடல் 1987ம் ஆண்டு பனிச்சரிவில் உயிரிழந்த 7 பேரில் ஒருவரான எலினா பஷிகினாவின் உடல் என்பது தெரிய வந்தது.

இது குறித்து உடனே மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எலினாவின் உடலுடன், அவரது ரஷ்ய பாஸ்போர்டும், 10 ஏப்ரல் 1987 தேதியிட்ட ஏரோபிளாட் விமான டிக்கெட்டும் கிடைத்துள்ளது.

மீட்கப்பட்ட எலினாவின் 31 ஆண்டுகளாக பனிக்குள் சிக்கியிருந்ததால், இறந்த அவரது உடல் பதப்படுத்தப்பட்டு,  மெழுகுச்சிலை தோற்றத்தில் இருந்தாக, உடலை கண்டுபிடித்த சுற்றுலா பயணிகள் தெரிவித்து உள்ளனர்.

எலினாவின் உடல் மீட்கப்பட்டது அவரது குடும்பத்தில் ஆச்சரியத்தையும், வேதனையும் ஏற்படுத்தி உள்ளது. எலினா எங்காவது உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையுடன் இருந்ததாகவும், அவர்  மாஸ்கோ அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றியதாகவும், திருமணம் ஆகாதவர் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.