சென்னை விமான நிலையத்துடன் கைகோர்க்கும் போயிங் நிறுவனம்! வருகிறது சூப்பர் வசதிகள்

சென்னை: சென்னை விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, பல நவீன வசதிகளை கொண்ட மாஸ்டர் பிளான் ஒன்றை தயாரிக்க போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் சென்னை விமான நிலையமும் ஒன்று. அத்தகைய பெயர் பெற்ற சென்னை விமான நிலையத்தை மேம்படுத்த போயிங் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதற்காக, இந்திய விமான இயக்குநரகம் மற்றும் போயிங் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.  அந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த 10 ஆண்டுகளில் படிப்படியாக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று விமான இயக்குநரக அதிகாரிகள் கூறி இருக்கின்றனர்.

அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது: போயிங் நிறுவன அதிகாரிகள் வர உள்ளனர். 2 நாட்கள் இது தொடர்பாக எங்களிடம் ஆலோசிக்கின்றனர்.  அதே நேரத்தில் 6 மாதங்களில் அவர்கள் ஆய்வு நடத்த உள்ளனர்.

அதன்பிறகு, அவர்கள் எங்களிடம் ஆய்வு அறிக்கையை அளிப்பர். பின்னர், படிப்படியாக வசதிகள் நிறைவேற்றப்படும். அதே நேரத்தில், விமான நிலைய ஓடுதளத்தில் ஒரு விமானம் இருக்கும் காலத்தை அதிகரிக்க வேண்டும் என்று அந்த குழு தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது.

55 முதல் 60 விநாடிகள் வரை, ஒரு விமானம், ஓடுபாதையில் இருக்கிறது. இந்த நேரத்தை வரும் காலங்களில் மேலும் சிறப்பான முறையில் மாற்ற முயற்சிக்க உள்ளோம் என்றார்.

சென்னை விமான நிலையம் போன்றே, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களிலும் இதேபோன்றதொரு ஆய்வை நடத்த போயிங் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 

கார்ட்டூன் கேலரி