பாதுகாப்பு வசதிக்கு தனியாக பணம் வாங்கும் போயிங் நிறுவனம்

நியுயார்க்

போயிங் விமானத்தில் பாதுகாப்பு அம்சங்களைப் பெற தனியாக கூடுதல் பணம் செலுத்த வேண்டிய் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் எதியோப்பியா ஏர்லைன்ஸின் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளாகி விமானத்தில் பயணம் செய்த அனைவரும் மரணம் அடைந்தனர்.   சில மாதங்களுக்கு முன்பு இந்தோநேசியாவில் இதே போல் ஏற்கனவே ஒரு போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த அனைவரும் மரணம் அடைந்தனர்.

இதை ஒட்டி பல விமான நிறுவனங்கள் போயிங் 737 விமானத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.    அது மட்டுமின்றி இந்த விமான விபத்துக்களின் ஒற்றுமை குறித்தும், விமானத்தில் உள்ள பாதுகாப்பு வசதிகள்  குறித்தும் ஆய்வு நடத்த போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்துக்கு பல நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

விபத்துக்குள்ளான இரு விமானங்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்படவில்லை என கூறப்படுகிறது.   அதனால் விபத்துக்கள் ஏற்பட்டிருக்க பெருமளவில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அது குறித்த விவரங்கள் வருமாறு :

இந்த விமானத்தின் மென்பொருள் விமானத்தின் மூக்கு பகுதி எந்த கோணத்தில் உள்ளது என்பதை அளந்து தெரிவிக்கும்.  அதன் மற்றொரு அம்சம் அவ்வாறு தவறான கோணத்தில் செல்லும் போது விமானிக்கு தெரிவித்து கோணத்தை மாற்றும்.  இதன் மூலம் விமானம் தடுமாற்றம் அடையாது,  அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்

போயிங்கில் தற்போதுள்ள மென்பொருளின் படி இந்த கோணத்தை அளந்து சொல்வது மட்டுமே உள்ளது.  மாற்ற வேண்டிய அமைப்புக்கு தனியாக தொகை செலுத்த வேண்டி உள்ளது.

இது குறித்து போயிங் 737 உற்பத்தி அதிகாரி ஒருவர், “இது மிகவும் முக்கியமான மென்பொருள்.  இது மிகவும் மலிவானது.  இதை ஏற்கனவே உள்ள அனைத்து போயிங் விமானத்திலும் பொருத்த வேண்டும்.    விமான நிறுவனங்களுக்கு இது குறித்து பல முறை தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.  இனி தயாராகும் விமானங்களில் இந்த அமைப்பு பொருத்தப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.