நியூயார்க்

போயிங் நிறுவனம் தனது 737 மேக்ஸ் ரக விமானம் விபத்துக்குள்ளானதில் மரணமடைந்தோர் குடும்பத்துக்கு 10 கோடி டாலர் நஷ்ட ஈடு ஒதுக்க உள்ளது.

போயிங் நிறுவனம் தயாரித்துள்ள 737 மேக்ஸ் ரக விமானம் தொடர்ந்து இருமுறை விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைவரும் மரணம் அடைந்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேசியா ஏர்லைன்ஸ் மற்றும் எதியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் மார்ச் மாதம் என ஆறு மாதங்களுக்குள் இந்த விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அதை ஒட்டி பல நாடுகளின் விமான நிறுவனங்கள் இந்த விமான பயன்பாட்டை நிறுத்தி விட்டன.

இந்த விபத்துகளில் மரணம் அடைந்தோரின் குடும்பத்தினர் பலர் விபத்துக்கு காரணம் போயிங் நிறுவனம் என குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளனர். அத்துடன் விமான சேவை நிறுவனங்களும் போயிங் விமான விபத்து தடை குறித்த சோதனை விவரங்களை உடனடியாக ஆய்வு செய்து ஆய்வறிக்கை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டன. இதை ஒப்புக் கொண்ட போயிங் நிறுவனம் தனது ஆய்வை முழு அளவில் நடத்துவதாக உறுதி அளித்தது.

இந்நிலையில் போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் தனது 737 மேக்ஸ் ரக விமான விபத்தில் மரணமடைந்தோர் குடும்பத்துக்கு உதவ 15 கோடி டாலர் ஒதுக்கீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நிதி வங்கியில் முதலீடு செய்யப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் தொகையில் மரணமடைந்தோர் குடும்பத்தினர் கல்வி, உள்ளிட்ட பல செலவுகளுக்கு தேவையான இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதற்கு மரணமடைந்தோர் குடும்பங்கள் சார்பில் வழக்கறிஞர் ராபர்ட் க்ளிஃபோர்ட், “இந்த விபத்துக்கான காரணம் குறித்த உண்மைகள் எதுவும் இன்னும் வெளி வராத நிலையில் போயிங் நிறுவனம் இவ்வாறு இழப்பீட்டு தொகையை அறிவித்துள்ளது. இது ஆச்சரியமாக உள்ளது. விபத்தால் மரணம் அடைந்தோர் குடும்பத்தினர் பணத் தேவைக்காக மட்டும் வழக்கு தொடரவில்லை என்பதை போயிங் புரிந்துக் கொள்ளவில்லை.

பலருடைய உடல் அடையாளம் காண முடியாத அளவு அழிந்து போன இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் தேவைகளுக்காக மட்டும் வழக்கு தொடரவில்லை. இது போல் இன்னொரு விபத்து நடைபெறாத அளவு போயிங் தனது பாதுகாப்பு சாதனங்களை மேம்படுத்த வேண்டும் என்பதும் அவர்கள் கேட்கும் ஒன்றாகும். அதாவது இந்த விமானங்கள் முழுமையாக புதிய வடிவமைக்க வேண்டும் என்பதும் பழைய விமானங்கள் மீண்டும் சோதிக்கப் படவேண்டும் என்பதும் அவர்கள் விருப்பம்” என தெரிவித்துள்ளார்.