அட்டர்னி ஜெனரல் எதிர்ப்பை மீறி போபர்ஸ் பீரங்கி குறித்து மீண்டும் விசாரணை கோரிய  சிபிஐ! காரணம் என்ன?

டில்லி,

போபர்ஸ் வழக்கு முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் வழக்கை தூசி தட்டிய மோடி அரசு, அட்டர்னி ஜெனரல் எச்சரிக்கையை மீறி உச்சநீதி மன்றத்தில் சிபிஐ மூலம் தாக்கல் செய்த நிலையில், உச்சநீதி மன்றம் வழக்கை தள்ளுபடி செய்து மோடி அரசின் மூக்கை உடைத்துள்ளது.

இந்த வழக்கின் மேல்முறையீடு தொடர்பாக, மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படும் வகையில்  சிபிஐ இயக்குனர் களிடையே ஏற்பட்ட மோதலும்,  தற்போது சிபிஐயில் நடைபெற்று வரும் பிரச்சினைகளுக்கும் தொடர்பு இருப்ப தாக தலைநகர் தகவல்கள் கசிந்து வருகின்றன.

போபர்ஸ் வழக்கு தொர்பாக அட்டர்னி ஜெனரல் எழுதிய கடிதம்

காங்கிரஸ் ஆட்சிமீது கூறப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீது குற்றச் சாட்டு கூறப்பட்ட து. இது தொடர்பான வழக்கில், கடந்த 2005ம் ஆண்டு டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது சிபிஐ  தவறான தகவலகள் மூலம்  வழக்கை நடத்தி மக்களின் வரிப்பணம் 250 கோடி ரூபாயை வீணடித்துவிட்டது என்று  சிபிஐக்கு கண்டனமும் தெரிவித்தது. இந்த வழக்கில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குற்றவாளி இல்லை என கடந்த  2014-ல் டில்லி உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.

கடந்த 2005ம் ஆண்டே போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், சுமார் 12 ஆண்டுகள் கழித்து, காங்கிரஸ் கட்சி மீது பழி சுமத்தும் வகையில், மோடி அரசு சிபிஐயை தனது கைக்குள் வைத்துக்கொண்டு மீண்டும் களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்தது.

அதன் தொடர்ச்சியாக, சிபிஐ அதிகாரிகள், போபர்ஸ்  பீரங்கி பேர ஊழலை மீண்டும் விசாரிக்க விரும்புவதாக நாடாளுமன்ற பொது கணக்கு குழுவின் துணை குழுவிடம் கடந்த ஆண்டு தெரிவித்தது.

மத்தியஅரசு இந்த வழக்கு அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்டுள்ளது. இதற்கு அட்டர்னி ஜெனரல் வேணு கோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.  வழக்கு முடிந்து 12 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது, தள்ளுபடியாகி விடும்  என்றும், மேலும், ஏற்கனவே பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், தீர்ப்புகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது மீண்டும் வழக்கு தொடர்ந்தால் அது அரசு மீது அதிருப்தியை உருவாக்கும் என்றும் எச்சரித்தார்.

ஆனால், சமீப காலமாக மோடி அரசுக்கு நாடு முழுவதும் பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருவதாலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாலும், காங்கிரசின் வளர்ச்சியை கட்டுப்படுத் தும் நோக்கில், மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்திமீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே  போபர்ஸ் வழக்கை அட்டர்னி ஜெனரலின் எச்சரிக்கையும் மீறி மோடியின்  கண்ணசைவுக்கு ஏற்ப   சிபிஐ அதிகாரிகள் மோடியின்  வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு மோடியின் மூக்கு உடைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், போபர்ஸ் வழக்கு மீண்டும் கிளறுவது தொடர்பாக  சிபிஐ இயக்குனர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிபிஐ இயக்குனர்கள் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா வுக்கும் இடையே நடைபெற்று வந்த ஊழல் தொடர்பான பனிப்போருடன் போபர்ஸ் வழக்கும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தலைநகர செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் மீது சேற்றை வாரி வீசும் நோக்கிலேயே சிபிஐ அதிகாரிகளின் ஒரு தரப்பினர், போபர்ஸ் வழக்கை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதி மன்றத்தை நாடியதாகவும், இது தொடர்பாக இயக்குனர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்தே  மத்திய அரசு இயக்குனர்கள் இருவரையும்  கட்டாய விடுப்பில் செல்ல வற்புறுத்தியதாகவும், அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல புதிய தற்காலிக இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி மீது வேண்டு மென்றே களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், ரஃபேல் போர் விமான ஊழலை மூடி மறைக்கும் விதமாகவே  வழக்கு தொடரப்பட்டதாகவும் டில்லி வட்டார தகவல்கள் உலா வருகின்றன.

போபர்ஸ் வழக்கை மீண்டும் கிளற செய்தது யார்? பிரதமர் மோடியா அல்லது பாஜக தலைமையா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

நாட்டின் உயர்ந்த பதவியில் உள்ள அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையை மீறி சிபிஐ அதிகாரிகள் தன்னிச்சையாக வழக்கு தொடர உத்தரவிட்டது யார்…  இவ்வளவு பெரிய அரசியல் முடிவுகளை எடுக்கக்கூடிய சக்தி எது என்ளும் கேள்வி எழுந்துள்ளது.

இந்த வழக்கு காரணமாக  ஆட்சியாளர்களின் கைப்பாவையாக சிபிஐ செயல்பட்டு வருவது இதன்மூலம் மீண்டும் நிருபணமாகி உள்ளது.

ஆனால், இந்த வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது காரணமாக, மோடி அரசுக்கு விழுந்த மற்றொரு சம்மடி அடி இது அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 

இந்த வழக்கு தள்ளுபடியானது குறித்து சமூக வலைதளங்களில் பாரதியஜனதா அரசு மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ஏற்கனவே  கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி,  சிபிஐ பாரதிய ஜனதாவின் கைப்பாவையாக மாறிவிட்டது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.