சென்னை: இந்தாண்டு போகிப் பண்டிகை கொண்டாட்டத்தில் பழைய பொருட்கள் அதிகம் எரிக்கப்பட்டதோடு, கடும் பனிமூட்டமும் சேர்ந்துகொண்டதால் தலைநகர் சென்னையே இருளில் மூழ்கியதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டது.

போகிப் பண்டிகையின்போது தேவையில்லாமல் பல மோசமான பொருட்களை எரிப்பது ஒரு வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மோசமடைந்து வந்தது.

இதனையடுத்து பொதுமக்களுக்கு பல அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வந்தாலும், கொளுத்துவது மட்டும் குறையவில்லை. அதேசமயம், டயர் உள்ளிட்ட மோசமான பொருட்கள் சற்று தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தாண்டு வழக்கத்திற்கு அதிகமாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் பழையப் பொருட்கள் எரிக்கப்பட்டதும் அதன் துகள்கள் காற்றில் உடனடியாக கரையவில்லை. இதனால், காற்றின் மாசு அதிகரித்து, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்ப்டடது.

சென்னையின் பல இடங்களில் காற்றின் மாசு மோசமடைந்து, புகை அதிகரித்தது. வாகன ஓட்டிகளின் பாடு திண்டாட்டமானது. முகப்பு விளக்குகளை எரியவிட்டும்கூட பல இடங்களில் வேலைக்கு ஆகவில்லை.

விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பல விமானங்கள் 1 மணிநேரம் கழித்தே தரையிறக்கப்பட்டன. மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாகவே புறப்பட்டு சென்றன.