#மீடூ பாதிப்பு : வில்லன் நடிகரின் விசேஷ முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மும்பை

#மீடூ பாதிப்பால் பிரபல வில்லன் நடிகர் தலிப் தாகில் ஒரு பலாத்கார காட்சியில் நடித்த நடிகையிடம் ஒன்றும் தவறு நடக்கவில்லை என வீடியோ எடுக்கச் சொல்லி உள்ளார்.

#மீடூ என்னும் ஹெஷ்டாக்கில் பல பெண்கள் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி வருகின்றனர். அதில் பாலிவுட்டை சேர்ந்த நானா படேகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் கூறியதும் கவிஞர் வைரமுத்து மீது தமிழ் பின்னணி பாடகி சின்மயி புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தித் திரை உலகில் நீண்ட நாட்களாக வில்லன் நடிகராக உள்ளவர் தலிப் தாகில். இவர் சமீபத்தில் ஒரு நடிகையை பலாத்காரம் செய்யும் காட்சியில் நடித்தார். அப்போது #மீடூ குற்றச்சாட்டு தன் மீது வராமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார். இது குறித்து நவபாரத் டைம்ஸ் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த தகவலின்படி தலிப் தாகில் முதலில் அக்காட்சியில் நடிக்க மறுத்துள்ளார். ஆயினும் தயாரிப்பாளர் வற்புறுத்தலுக்கு இணங்க ஒரு சில கண்டிஷன்களுடன் அவர் அக்காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அக்காட்சியில் நடித்த நடிகையிடம் அந்தக் காட்சியில் நடிக்க யாரும் வற்புறுத்தவில்லை எனவும் அவ்வாறு நடிக்க எவ்வித ஆட்சேபமும் இல்லை எனவும் எழுதி வாங்கிக் கொண்டுள்ளார்.

அத்துடன் படப்பிடிப்பு முடிந்ததும் காமிரா முன்பு அந்த நடிகை தோன்றி இந்தக் காட்சியில் நடித்ததால் எந்த ஒரு அசவுகரியமும் உண்டாகவில்லை எனவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக இருந்தது எனவும் கூற வைத்துள்ளார். இந்த நிகழ்வு வீடீயோ படமாக்கப்பட்ட போது ஒரு பிரதி எடுத்து தன்னுடன் வைத்துக் கொண்டுள்ளார்.

இவ்வளவு முன்னெச்சரிக்கை உள்ள நடிகர் தலிப் தாகில் சென்ற மாதம் 25ஆம் தேதி ஏராளமாக மது அருந்திவிட்டு  குடிபோதையில் கார் ஓட்டி ஒரு ஆட்டோ மீது மோதியது குறிப்பிடத்தக்கது.