Random image

கிராமத்துக்கே சோலார்  விளக்கேற்றி வைத்த நடிகை ஆலியா பட்!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஏழை மக்களின் குடிசைகளுக்கு சோலார் மின் விளக்கு பொறுத்தித்தந்திருக்கிறார் பாலிவுட் நடிகை ஆலியா பட்.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர்  ஆலியா பட். தற்போது கலங்க், பிரமாஸ்ட்ரா, குல்லி பாய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள பின்தங்கிய கிராமத்தில், குடிசைகளுக்கு சோலார் மின் விளக்குகள் பொறுத்தித்தந்திருக்கிறார் ஆலியா பாட். இந்த கிராமம்   மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிக்கேரி ஆகும்.

இங்கு ஏராளமான ஏழை மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  இவர்கள்  மின்சாரம் உள்பட எந்த அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்துவருகிறார்கள். தங்களது நிலை குறித்து  அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை.

இந்த நிலையில்தான், கிராமத்தை பற்றி கேள்விபட்ட ஆலியா பட்  உதவுவதற்கு முன் வந்தார். மி வார்ட்ரோப் இஸ்ஸ் சூ வார்ட்ரோப் (Mi Wardrobe is Su Wardrobe) என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் அக்கிராமத்தில் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் வசிக்கும் 200 மக்கள் பயன்பெறும் வகையில்,  சோலார் விளக்கு அளித்துள்ளார்.

இது குறித்து, அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்,  “மைசூர் அருகிலுள்ள ஏபிஎம்சி யார்டு அருகில் நாங்கள் குடிசை வீடு கட்டி வாழ்ந்து வந்தோம். பிறகு இந்தப் பகுதிக்கு வந்து கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது  இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு மின் வசதி இல்லை. இதற்காக அரசு அலுவலர்களிடம் பல முறை கோரிக்கை வைத்திருக்கிறோம். போராட்டங்கள் நடத்தியிருக்கிறோம். ஆனால் எந்த பயனும் இல்லை. இந்த நிலையில் இப்போது ஆலியா பட் மூலம் எங்கள் வாழ்க்கையில் ஒளி பிறந்துள்ளது” என்கிறார்கள்.

மேலும் இவர்கள், “இதுவரை மாலை 6.30 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டுவிடுவோம்.  அதற்கு மேல் வெளிச்சம் இருக்காது. மண்ணெண்ணெய் விளக்குகள்தான். அதில் கிடைக்கும் குறைவான வெளிச்சத்தில் சாப்பாட்டில் பூச்சிகள் விழுந்தால் கூட தெரியாது. ஆகவேதான் மாலை நேரத்திலேயே சாப்பிட்டு வந்தோம்.

கடந்த வெள்ளிக்கிழமை எங்களுக்கு சோலார் மின் விளக்கு அளிக்கப்பட்டது. இப்போது, இரவு 8 மணிக்கு சாப்பிடுகிறோம். இதுவரை நடிகை ஆலியா பட்டை நாங்கள் பார்த்ததில்லை. ஒருமுறையாவது அவரை பார்க்க வேண்டும்” என்கிறார்கள் கிராமத்து மக்கள்.

“ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் காப்பாற்றவே அரசியலுக்கு வருகிறோம்” என்று சொல்லும் தமிழக நாயகர்களுக்கு இந்த மக்களின் வார்த்தைகள் சமர்ப்பணம்.