பிரபல இந்தி நடிகை ஊர்மிளா, கமலஹாசன் நடித்த ‘இந்தியன்’ படத்தில் நடித்ததால் தமிழ்நாட்டிலும் பரிச்சயம் ஆனவர்.

அரசியலில் ஈடுபாடு கொண்ட அவர் கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு, தோற்றுப்போனார். அதன் பின், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விட்டார்.

சர்ச்சை நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசியபோது, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார், ஊர்மிளா.

இதனால் ஆளும் சிவசேனா கட்சியின் அன்புக்கு பாத்திரமானார். கங்கனாவை விமர்சித்ததால், ஊர்மிளாவுக்கு சின்ன வெகுமதியாக எம்.எல்.சி. பதவி வழங்க சிவசேனா முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிர ஆளுனர் கோட்டாவில் இருந்து, அந்த மாநில மேல்சபைக்கு , 12 எம்.எல்.சி.க்கள் நியமிக்கப்பட வேண்டும். இதில் ஒரு எம்.எல்.சி. பதவிக்கு ஊர்மிளாவை , சிவசேனா பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில், கட்சி உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு எம்.எல்.சி. பதவி கொடுப்பதா? என சிவசேனாவில் முணுமுணுப்புகள் எழுந்ததால், ஊர்மிளா சிவசேனாவில் சேர முடிவு செய்துள்ளார்.

மும்பையில், முதல்- அமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே முன்னிலையில் ஊர்மிளா நாளை (செவ்வாய்கிழமை) சிவசேனாவில் சேர்கிறார்.

உத்தவ் தாக்கரேயின் நெருங்கிய சகாவான ஹர்ஷல் பிரதான் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி