இந்தி சினிமாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராகச் சதி..

இந்தி சினிமாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராகச் சதி..

கடந்த சில ஆண்டுகளாக இந்தி திரைப்படங்களுக்கு இசை அமைப்பதை ஏ.ஆர்.ரகுமான் குறைத்துக் கொண்டார்.

அண்மையில் ’’ரேடியோ மிர்ச்சி’’ வானொலிக்குப் பேட்டி அளித்த ஏ.ஆர்.ரகுமானிடம் இது குறித்துக் கேட்கப்பட்டது.

இந்தி சினிமாவில் அவருக்கு எதிராகச் சதி நடப்பதாக அந்த பேட்டியில் சூசகமாகக் கருத்து தெரிவித்துள்ளார், நம்ம சென்னையின் இசை நாயகன்.

ஏ.ஆர்.ரகுமான் அளித்துள்ள பேட்டியின் சாராம்சம் இது:

‘’சமீபத்தில் முகேஷ் சாப்ரா , தனது படத்துக்கு இசை அமைக்க என்னை அணுகினார்.

இரண்டே நாட்களில் நான்கு பாடல்களை அவருக்கு இசை அமைத்துக்கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம் ஒரு தகவலைத் தெரிவித்தார்.

‘’சார்! அங்குள்ளோர் ( இந்தி) ‘பாடல்களுக்கு இசை அமைக்க யாரும் ரகுமானிடம் போக  வேண்டாம் ‘’ என்று சொல்கிறார்கள். மேலும் நிறைய கதைகளையும் கூறுகின்றனர்’’ என்று முகேஷ் கூறினார்.

“எனக்கு ஏன் அதிகமாக நல்ல இந்தி சினிமாக்கள் வரவில்லை என அப்போது தான் தெரிந்து கொண்டேன். எனக்கு எதிராகப் பெரிய கூட்டமே அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறது. தங்களை, காயப்படுத்திக்கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

மக்கள் என்னிடம் இருந்து நல்ல இசையை எதிர் பார்க்கிறார்கள். ஆனால் நான் நல்ல படங்களுக்கு இசை அமைக்கக்கூடாது என்று ஒரு கும்பல் தடை செய்கிறது.

நடக்கட்டும். நான் விதியில் நம்பிக்கை கொண்டவன். அனைத்தும் ஆண்டவனிடம் இருந்து கிடைப்பதாக நம்புகிறவன்.

எனக்கு வரும் படங்களில் நல்ல முறையில், பாடல்கள் கொடுக்கிறேன்.அது போதும்’’

இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் அளித்துள்ள பேட்டி சினிமா உலகில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பா.பாரதி.