புதுடெல்லி: உருதுமொழியை மேம்படுத்தும் மத்திய அரசின் முயற்சியில், பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான்கான், ஷாருக்கான் மற்றும் கத்ரினா கைஃப் ஆகியோர் சேர்க்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

இந்த சினிமா நட்சத்திரங்களை தேர்வு செய்திருப்பதானது, அந்த மொழியின் மீது நிகழ்த்தப்பட்டிருக்கும் நேரடி தாக்குதல் எனும் அளவிற்கு விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பான ‘உருது மொழி மேம்பாட்டிற்கான தேசிய கவுன்சில் (NCPUL), சினிமா நட்சத்திரங்களை தேர்வுசெய்யும் முடிவை மேற்கொண்டுள்ளது.

அது, தற்போது பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது. இதற்கு முன்பு, இந்த கவுன்சில், உருது மொழியில் புத்தகங்களை வெளியிட்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல மாநாடுகளையும் நடத்தியுள்ளது. தற்போது சினிமா நட்சத்திரங்களையும் உள்ளடக்கும் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2014-19ம் ஆண்டு காலகட்டத்தில், உருது மொழி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக, மத்திய அரசின் சார்பில், ரூ.332.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி