ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு! 50 பேர் பலி!

காபூல்,

ப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் அருகே சக்தி வாய்ந்த கார் குண்டு வெடித்தது. இதன் கோர  தாக்குதலில் 50 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளி நாடுகளின் தூதர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பு உள்ளது. இதனால் இங்கு பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று காலை 8.22 மணி அளவில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரில் வந்த தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் அந்த பகுதியில் இருந்த ஜெர்மன் தூதரகம் அருகே வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார்.

இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அந்த பகுதி  தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள  ஜெர்மன் தூதரகம் அருகே இந்திய தூதரகமும் உள்ளது.

இந்த வெடிவிபத்து காரணமாக இந்திய தூதரகத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சேதம் அடைந்தன. மேலும் அந்த பகுதியில் இருந்த  ஜனாதிபதி மாளிகை மற்றும் வெளிநாட்டு தூதர்களின் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் நொறுங்கி சேதம் அடைந்தன.

இந்த கோரமான குண்டுவெடிப்பில், 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பலி விவரம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 

காபூல் கார் குண்டு தற்கொலை படை தாக்குதலில் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் கடவுள் அருளால் பத்திரமாக உள்ளனர் என வெளியுறவு மந்திரி சுஷ்மாசுவராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.