காஞ்சிபுரம்:

திருப்போரூர் அருகே உள்ள குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட வெடிகுண்டு பாதுகாப்பான முறை யில் வெடிக்கச் செய்து அழிக்கப்பட்டது

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக  மத்தியஅரசு தகவல் கொடுத்திருந்த நிலையில், தமிழகம் முழுவதும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்போரூர் அருகே உள்ள  மானாம்பதி கிராமத்தில் இருக்கும் பழமையான கங்கையம்மன்  கோவில் அருகே குண்டு வெடித்து 2 இளைஞர்கள் பலியானார்கள். மேலும்,  4 பேர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு மற்றும் சென்னை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் காயலான் கடை வைத்திருந்த நபரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வெடித்த குண்டானது  ராணுவ ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தப்படும் வெடி குண்டுகளின் பியூஜ் ((CGRL)) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த குளத்தில் மேலும் ஆய்வு நடத்தியபோது, அதே போன்ற மற்றுமொரு வெடிகுண்டும் கண்டெடுக்கப்பட்டது.

அந்த குண்டை செயலிழக்க வைக்க நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சென்னை மற்றும் காஞ்சி புரத்தை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

ஏற்கனவே மானாமதி ஏரியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் வெடிகுண்டை வைத்து, 2 அடிக்கு 2 அடி இடைவெளி விட்டு மணல்  மூட்டைகளால் மூடி பாதுகாப்பான முறையில் வெடிக்க வைக்கப் பட்டது. வெடிகுண்டு வெடித்த போது மணல் மூட்டைகள் சிதறியதில் அப்பகுதி புழுதி மண்டலமாக காட்சியளித்தது.