டில்லி

புல்வாமா தாக்குதல் மற்றும்  இலங்கை குண்டு வெடிப்புக்கு பிறகு போலி வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்புக்கள் அதிகரித்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.     ஈஸ்டர் தினத்தன்று இலங்கை கொழும்பு நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.   சுமார் 500க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர்.

இந்த இரு தாக்குதல் குறித்தும் எச்சரிக்கை தகவல்கள் வந்துள்ளன.    ஆயினும் அந்த தகவல்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை.    ஆகவே அதன்பிறகு எங்கு எந்த ஒரு எச்சரிக்கை தகவல் வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   பெரும்பாலான சமயங்களில் இது போலித் தகவலகளாக உள்ளன.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத மத்திய பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர், “புல்வாமா மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் நடந்த தாக்குதலுக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் குறித்த போலி தொலைபேசி அழைப்புக்கள் இரு மடங்காகி உள்ளன.   பேசுபவர்களை கண்டு பிடிப்பதற்குள் அவர்கள் அழைப்பை முடித்து விடுகின்றனர்.    இதனால் பலரை கண்டுபிடிக்க முடிவதில்லை.

இதில் ஒரு சிலர் யாரையாவது பழிவாங்கவும் இத்தகைய அழைப்புக்களை செய்கின்றனர்.   அது மட்டுமின்றி ஒரு சில மனநிலை பிறழ்ந்தவர்களும் இவ்வாறு செய்கின்றனர்.   இவை போலி என நினைத்து அலட்சியம் செய்ய முடியாது.   ஆகவே ஒவ்வொரு அழைப்புக்கு பிறகும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் உள்ளிட்ட பல தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

இவ்வாறு டில்லியில்  உள்ள ஒரு மனநிலை பிறழ்ந்தவர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.   அவர் டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் குப்பை தொட்டியில் ஒரு பையை வீசி விட்டு அதில் வெடிகுண்டு உள்ளதாகவும் அதை வைத்த பாகிஸ்தானியர்கள் விமான நிலையத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   பல மணி நேர சோதனைக்கு பிறகு அது போலி என கண்டறியப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.