தர்மபுரியில் சொத்து தகராறில் வீட்டிற்குள் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மாட்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு செந்தில், விமல், வினோத் என 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சொக்கலிங்கம் தனது சொந்தமான நிலத்தில் 2 புதிய வீடுகளை கட்டி உள்ளார். இதில் ஒரு வீட்டை மூத்த மகன் செந்திலுக்கும், இன்னொரு வீட்டை கடைசி மகனான வினோத்துக்கும் கொடுத்ததாக தெரிகிறது. சொக்கலிங்கம் தற்போது குடியிருக்கும் பழைய வீட்டை தனது 2வது மகனான விமலிடம் எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். அதற்கு அவர் அண்ணன் மற்றும் தம்பிக்கு புதிய வீட்டை கொடுத்துவிட்டு எனக்கு பழைய வீட்டை தருகிறீர்களா? என்று கேட்டு தனது தந்தையிடம் தகராறு செய்தார்.

இதுகுறித்து ஊர் பெரியவர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் சொக்கலிங்கம் மற்றும் மகன்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் சொக்கலிங்கம் தனக்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலத்தை தனது மகன்கள் மற்றும் மகளுக்கு சமமாக பிரித்து கொடுப்பதாகவும், 2 புதிய வீட்டில் ஒன்றை செந்திலுக்கும் மற்றொரு வீட்டை வினோத்துக்கும் கொடுப்பதாகவும், பழைய வீட்டை 2வது மகன் விமலுக்கு கொடுப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் விமல் தனக்கு பழைய வீட்டிற்கு பதிலாக புதிய வீடுகளில் ஏதாவது ஒன்றை தனக்கு தருமாறு தொடர்ந்து பிடிவாதமாக கூறினார்.

இந்த நிலையில் நேற்று இரவு செந்திலுக்கு கொடுக்கப்பட்ட கிரகப்பிரவேசத்துக்கு தயாராக இருக்கும் புதிய வீட்டிற்குள் விமல், திருவிழாவிற்கு பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டை பற்றவைத்து வீசிவிட்டு சென்றார். இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது. வீட்டிற்குள் யாரும் இல்லாததால் எந்தவித அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை.

இது தொடர்பாக காரிமங்கலம் போலீசார் விமலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சொத்து தகராறு காரணமாக வீட்டிற்குள் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.