ராமேஸ்வரம் கடற்கரை அருகே வெடிகுண்டு புதையல்: பொதுமக்கள் அச்சம்

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் அருகே உள்ள கடற்கரை பகுதியான  தங்கச்சிமடத்தில் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வெடிகுண்டுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தங்கச்சிமடத்தை அடுத்த அந்தோணியார்புரம் கடற்கரை அருகே வசித்து வரும் மீனவரான எடிசன் என்பவர், தனது  வீட்டில் கழிவறைக்கு தேவையான  செப்டிக் டேங்கு கட்ட பள்ளம் தோண்டி உள்ளார். அப்போது பூமிக்கடியில் சிறுசிறு பெட்கள் காணப்பட்டுள்ளது. அதில் ஏதோ புதையல் இருப்பதாக எடுத்து பார்த்தவருக்கு அதனுள்  துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தால் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து  தங்கச்சிமடம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

காவலர்கள் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து . மணல் அள்ளும் இயந்திரம் கொண்டுவரப்பட்டு  அந்த பகுதியில் தோண்டியபோது,  40 இரும்பு பெட்டிகளில் தானியங்கி துப்பாக்கிகள், புல்லட்டுகள், கண்ணி வெடிகள்  உள்பட ஏராளமான ஆயுதங்கள் கிடைத்தன.

தோண்ட தோண்ட  மேலும்  பெட்டி, பெட்டியாக வெடிகுண்டுகள், ராக்கெட் லான்ச்சர்கள், டிஎம்டி சிலாப்ஸ்  எனப்படும் வெடி குண்டுகளுடன்  57 பெட்டிகளும், எல்எம்ஜி வகை குண்டுகள் அடங்கிய 22 பெட்டிகளும்.  கிர்னட் வகை குண்டுகள் அடங்கிய 15 பெட்டிகளும், பக்ஷாட் வகை குண்டுகள் அடங்கிய 3 பெட்டிகளும் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த புதையலில்  8 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள், 400 இயந்திரத் துப்பாக்கிகள், இரண்டு சிறிய ரக ராக்கெட் லாஞ்சர்கள், 5 கையெறி குண்டுகள், கடலில் வெடிக்கும் 201 கண்ணிவெடிகள், தரையில் பதிக்கும் கண்ணி வெடிகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த பகுதியில் ஏற்கனவே விடுதலைப்புலிகள் ஆயுத பயிற்சி மேற்கொண்டதாகவும், அப்போது இந்த குண்டுகளை அவர்கள் புதைத்து வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி., காமினி, எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா, டி.எஸ்.பி., மகேஸ்வரன் வந்தனர். இந்த ஆயுதங்களில் பல மக்கிய நிலையிலும், சில ஆயுதங்கள் மெருகு குலையாமல் பளபளப்புடனும் இருந்தன. ஆயுதங்களின் வீரியத்தன்மை குறித்து நவீன கருவி மூலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், இதுபோன்ற ஆயுத புதையல் அந்த பகுதியில் வேறு எங்கும் உள்ளதா என்பது குறித்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  இது அநத பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களும் அச்சமடைந்து உள்ளனர்.