மும்பை

கோர்ட் உத்தரவை நிறைவேற்ற காலக்கெடு கேட்டுக் கொண்டே போன ஒரு தன்னார்வ நிதி நிறுவனத்துக்கு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி படேல் ரூ.4,50,000 அபராதம் விதித்துள்ளார்.

ஒரு தன்னார்வ நிதி நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்கு கடந்த 2009 ஆம் வருடத்தில் இருந்து மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.    உயர்நீதிமன்றம் கேட்ட சில விவரங்களை தராமல் அந்த நிறுவனம் இழுக்கடித்து வந்தது.    இந்த விவரங்களை உடனடியாக தரவேண்டும் என பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் நிறுவனம் காலக் கெடு கேட்டுக் கொண்டே இருந்தது.

இறுதியாக மும்பை உயர்நீதிமன்றம் கடந்த 2016ஆம் வருடம் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அன்று விவரங்களை அளிக்க  இறுதிக் கெடு விதித்திருந்தது.   அந்த நிறுவனம் அப்போதும் விவரங்களை அளிக்கவில்லை.    இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் வாய்தா வாங்கிக் கொண்டு வந்தது.    சென்ற மாதம் 27ஆம் தேதி அன்று இந்த வழக்கு மீண்டும் நீதிபதி படேலிடம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நிறுவனம் இந்த விவரங்களை நீதிமன்றத்துக்கு அளிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம் கேட்டது.   அதற்கு எதிர்தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  வழக்கை விசாரித்த நீதிபதி படேல் அந்த நிறுவனத்துக்கு மேலும் காலக்கெடு அளிக்க மறுத்து விட்டார்.   மேலும் தேவை இல்லாமல் நாட்களை கடத்துவதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக ஒரு நாளைக்கு ரூ. 1000 வீதம் அபராதம் விதித்துள்ளார்.

இந்த அபராதம் நீதிமன்றம் கொடுத்த இறுதிக் கெடுவான கடந்த 2016ஆம் வருடம் நவம்பர் 5ஆம் தேதியில் இருந்து கணக்கிடப்பட்டு 450 நாட்களுக்கு ரூ.4,50,000 அபராதம் விதித்துள்ளார்.   மேலும் கால தாமதம் செய்யும் போது அபராதத் தொகை இன்னும் அதிகரிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.