மும்பை:

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த விமானங்களில் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் மார்ச் 23-ந் தேதி பிறப்பித்த நடுஇருக்கையை காலியாக விட வேண்டும் என்ற வழிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா விமானி தேவன் கனானி என்பவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரிட்த நீதிபதிகள் கூறியதாவது:

ஏர் இந்தியா விமானத்தில் வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்படும் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக வழிகாட்டுதல்கள் மீறப்பட்டதாக எதுவும் தெரியவில்லை. விமானங்களில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. பயணிகள் இறங்கியவுடன் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர் அவர்கள் 7 முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். கொரோனாவுக்கு ஆளானவர்கள் யாரும் விமான பயணத்தின் போது தான் தொற்று ஏற்பட்டதாக இதுநாள் வரை நிரூபிக்கப்படவில்லை.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உயர்மட்ட நிபுணர் குழு, நடுஇருக்கை காலியாக இருக்க வேண்டும் என்பதை நிராகரித்து உள்ளது. விமானத்தின் நடு இருக்கை காலியாக வைக்கப்படாவிட்டாலும் கூட, விமானத்தில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கருதுகிறோம்.

அதே நேரத்தில் விமான போக்குவரத்து நிறுவனங்கள் கொரோனா பரவாமல் தடுப்பதற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.