மும்பை

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்படி மும்பை உயர் நீதிமன்றம் மஹாராஷ்ட்ர அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

துலே மாவட்ட அரசு மருத்துவமனையில் சமீபத்தில் பயிற்சி டாக்டர் ஒருவர் நோயாளியின் உறவினரால் தாக்கப்பட்டார். இதை தொடர்ந்து நாசிக், மும்பை சயான் மருதுவமனையிலும் மருத்துவர்கள் தாக்கப்பட்டனர். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள்  வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றுஇரவும் மும்பை ஸ்யான் மருத்துவமனையில் உள்ள குழந்தை மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே இதுவரை இப்பிர்சனை குறித்து மவுனம்காத்த மஹாராஷ்ட்ர முதலமைச்சர் தேவேந்திரா பட்னாவிஸ் முதல்முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  சட்டமன்றத்தில்  இன்று  பேசிய அவர், மருத்துவர்கள் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் காலவரையறை அற்ற போராட்டத்தால் ஏழைமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அதனால் மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என  கேட்டுக் கொண்டுள்ளார். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும் அவர் உறுதி தெரிவி்த்தார்.  இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மருத்துவர்கள் வேலைக்குத் திரும்பவேண்டும் என்றும் அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தி உத்தரவி்ட்டார்.