திருவனந்தபுரம்,

கேரளாவில் மார்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், பாரதியஜனதா கட்சியினருக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருவது வழக்கமானது.

நேற்று மாலையும் மார்க்சிஸ்டு தலைவர் பேச இருந்த கூட்டத்தில் பாஜக ஆதரவாளர்களால் குண்டு வீசப்பட்டது. அதைத்தொடர்ந்து பா.ஜ.க அலுவலகம் கம்யூனிஸ்டு கட்சியினரால் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் இரு கட்சியினரிடையே அரசியல் மோதல்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இடையே மோதல் காரணமாக பல கொலைகளும் நடந்துள்ளன.

நேற்று மாலை  கண்ணூர் மாவட்டம் தலசேரி பகுதியில், கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தலைமையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொதுக்கூட்டம் நடப்பதாக இருந்தது.

இதற்கு அப்பகுதி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்..

இந்நிலையில் கூட்டம் ஆரம்பமாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர்  பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியை நோக்கி வெடிகுண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிவிட்டார்.

மேடை அருகே விழுந்த அந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் ஒருவருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து கண்ணூரை அடுத்துள்ள நடபுரம் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா அலுவல கத்திற்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். மேலும்  வடகரா பகுதியில் உள்ள  பாரதிய ஜனதா அலுவலகமும் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது.

கண்ணூர் மாவட்டத்தில் மீண்டும் மார்க்சிஸ்டு – பாரதிய ஜனதா கட்சியினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது அப்பகுதி மக்கள் இடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன்  கடும் கண்டனம் தெரிவித்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.