வெளிநாட்டில் தவிக்கும் 62 தமிழர்கள்! தமிழக அரசுக்கு அக்கறை இல்லை!

மதுரை:

வெளிநாட்டில் கொத்தடிமைகளாக தவிக்கும் 62 மீனவர்கள் பற்றிய விவகாரத்தில் தமிழக அரசு மத்திய அரசுக்கு எந்த வித அழுத்தமும் தரவில்லை என்பது அம்பலமாகியிருக்கிறது.

குமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தஞ்சை மாவட்டங்களைச் சார்ந்த 62 மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்று சவுதி அரேபியாவில் கொத்தடிமைகளாக  சிறைப்பட்டுள்ளனர். இவர்களை மீட்கக் கோரி மீனவர்களின் குடும்பத்தினர் ஆட்கொணர்வு மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நடந்தபோது, தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

download

இந்த நிலையில் நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, “சவுதி அரேபியாவின் சட்ட விதிமுறைகள் சிக்கலாக உள்ளதால் கால அவகாசம் தேவைப்படுகிறது” என்று மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் ஒருவாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் தமிழக மீன்வளத்துறை சார்பில் ராமநாதபுர மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் ஆஜரானார். அவர், “இந்த விவகாரம் இதுகுறித்து சென்னையில் உள்ள மீன்வளத்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியிக்கிறேன்” என்றார்.

இதில் அதிருப்தி அடைந்த நீதிபதி, ‘ஆறு மாதங்களாக மீனவர்கள் துயரமான சூழலில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னமும் நீங்கள் கடிதம் எழுதியிருப்பதாகவே சொல்கிறீர்கள்.  நீங்கள் புறாவின் காலில் கடிதம் கட்டி அனுப்பியிருக்கிறீர்களா? மீனவர்களை மீட்க வேறு வழிகளே இல்லையா?’ என்று கேள்வி எழுப்பினர். பிறகு, மத்திய அரசு வழக்கறிஞரிடம், “மீனவர்களை மீட்பது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து அழுத்தம் வந்ததா?” என்று கேட்டார்.  இதற்கு பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், “இந்த நீதிமன்றத்தை தவிர வேறு எங்கிருந்தும் தங்களுக்கு அழுத்தம் வரவில்லை” என்றார்.

இதையடுத்து, “‘தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று தமிழக அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தார்கள்.