மங்களூரு:

ர்நாடக மாநில அரசு பள்ளிக்குழந்தைகளின் புத்தகங்கள் தொடர்பாக புதிய உத்தரவு பிறப்பித்தி ருந்த நிலையில், அதை செயல்படுத்தும் விதமாக  பல தனியார் பள்ளிகள், எடை இயந்திரங்களை நிறுவி வருகிறது.

பள்ளிகளில் படிக்கும் சிறு குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை புத்தக மூட்டையை சுமந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதுகுறித்து பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், கர்நாடக மாநில அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக மாநில கல்வித்துறை கடந்த 3ந்தேதி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, பள்ளி மாணவ மாணவியரின் உடல் எடையில் 10 சதவிகிதம் மட்டுமே புத்தகப்பையின் எடையாக இருக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது .

மேலும்,  1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை  1.5 – 2 கிலோ எடையும், 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 2 – 3 கிலோ எடையும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 3 – 4 கிலோ எடையும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 5 கிலோ எடையும் கொண்ட புத்தகப்பையை மட்டுமே பள்ளிக்கூடங் களுக்கு  எடுத்துச் செல்லலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1ம் வகுப்பு, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது. மாதத்தின் 3வது சனிக்கிழமையன்று புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு மாணவர்கள் வர வேண்டும். அன்றைய தினம் விளையாட்டு மற்றும் திறன் வளர்ப்பில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த நடைமுறைகள் இந்த கல்வி ஆண்டு முதலே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதிரடிகாட்டியுள்ளது.

மாநில அரசின் உத்தரவுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பல தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை வரவேற்று, புத்தக பையின் எடைகளை பரிசோதிக்கும் வகையில் எடை இயந்திரங்களை நிறுவி வருகின்றன.  மாணவர்களின் எடை மற்றும் புத்தகங்களி எடையை சரிபார்க்கும் வகையில் எடை மெஷின்கள் நிறுவப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளன.

பள்ளிக்குழந்தைகளின் புத்தக சுமையை குறைக்க மாநில அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.