புதுடெல்லி: ஏப்ரல் 14ம் தேதி மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், ஏப்ரல் 15 முதல் ரயில் மற்றும் விமானப் பயணங்களுக்கு முன்பதிவு செய்யலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில், சரக்கு ரயில்கள் தவிர, அனைத்துவகை பயணிகள் ரயில்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. விமானப் பயணங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் மொத்தம் 9000 சரக்கு ரயில்கள் எப்போதும் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பயணிகள் ரயில்களைப் பொறுத்தவரை, ஏப்ரல் 15 முதல் முன்பதிவுகள் துவங்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம், மார்ச் 22 முதல் ஊரடங்கில் இருந்ததால், ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பி, அனைத்துப் பணிகளும் மீண்டும் முறையாக முழு வேகத்தில் துவக்கப்படுவதற்கு சிறிது நாட்கள் அவகாசம் எடுக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான சிறப்பு பார்சல் ரயில்களின் வழித்தடங்களை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் கோஏர் போன்ற தனியார் விமான நிறுவனங்கள், தங்களின் உள்நாட்டு விமான சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவை ஏப்ரல் 15 முதல் துவங்குகின்றன என்று கூறப்பட்டாலும், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.