டிசம்பர் 10 அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பூமி பூஜை 

டில்லி

ந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தின் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா வரும் டிசம்பர் 10 அன்று நடைபெற உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  தற்போது கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கடும் பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில் இந்த புதிய கட்டிடம் கட்ட  எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   ஆயினும் அரசு அதைக் கருத்தில் கொள்ளாமல் கட்டிடம் கட்ட தொடக்கப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.

புதியதாக அமைக்கப்பட உள்ள இந்த கட்டிடம் 64500 சதுர மீட்டர் அளவிலும் தற்போதைய கட்டிடத்தை  போல் 17000 மடங்கு அதிக அளவிலும் அமைக்கப்பட உள்ளது.   இந்த கட்டிடம் கட்ட ரூ.971 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  இந்த கட்டுமானப் பணியைச் செய்ய டாடா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “வரும் டிசம்பர் 10 ஆம் தேதி அன்று இந்த கட்டிடத்துக்கான பூமி பூஜை நடைபெற உள்ளது.   இந்த பூஜையில் கலந்துக் கொள்ளும் பிரதமர் மோடி இதற்கான அடிக்கல்லை நாட்ட உள்ளார்.  புதிய கட்டிடத்தின் அரங்கில் சுமார் 888 மக்களவை உறுப்பினரும் 326 மாநிலங்களவை உறுப்பினருமாக மொத்தம் சுமார் 1224 உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் அமர முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.