சென்னை

வாக்குச் சாவடி சீட்டு என்னும் பூத் ஸ்லிப் இல்லை எனினும் வாக்களிக்க முடியும்

மக்களவை தேர்தலில் இன்று தமிழகத்தில் உள்ள வேலூர் தொகுதியை தவிர மற்ற தொகுதிகளிலும் புதுச்சேரி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இன்று காலை ஏழு மணி முதல் இந்த வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் அரசியல் கட்சியினர் வாக்குச் சாவடி சீட்டு எனப்படும் பூத் ஸ்லிப்பை அளித்துள்ளனர். அத்துடன் இதை ஆன்லைன் மூலமும் பிரிண்ட் எடுக்க முடியும்.

ஒரு சில இடங்களில் பூத் ஸ்லிப் எடுத்து வராத வாக்காளர்களை திருப்பி அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவ்வாறு திருவான்மியூரில் ஒரு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் அவருடைய குடும்பத்தினருடன் பூத் ஸ்லிப் இல்லாததால் திருப்பி அனுப்பபட்டதாக தகவல்கள் வந்துள்ளன. அவர்கள் வீட்டுக்கு சென்று தங்கள் பூத் ஸ்லிப் எடுத்து வந்த பின்னர் வாக்களிக்க அனுமதித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, “வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். வாக்காளர் சீட்டுக்களை பல அரசியல் கட்சிகளும் அலுவலர்களும் அளித்துள்ளனர். பொது மக்களும் ஆன்லைன் மூலம் டவுன் லோடு செய்துக் கொள்ள முடியும். அது மட்டுமின்றி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள எந்த ஒரு அடையாள ஆவணம் இருந்தாலே போதுமானது.” என தெரிவித்துள்ளார்.

இந்த பூத் ஸ்லிப்புகள் என்பது வாக்காளர்களின் வாக்கு சாவடி எண் உள்ளிட்டவைகளை அவர்களுக்கு அறிவிக்கவே அளிக்கப்படுகிறது. எனவே மக்கள் இதை ஆன்லைன் மூலம் டவுன் லோடு செய்து எடுத்துச் செல்லலாம். அவ்வாறு இல்லை எனினும் தங்கள் வாக்குச் சாவடி எண்ணை தெரிந்துக் கொண்டால் போதும். வாக்காளர்கள் அவரவர் அடையாள அட்டையை காட்டி வாக்களிக்க முடியும்.