சென்னை :
சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நாளை டாஸ்மாக் கடைகளை திறக்க இருக்கிறது தமிழக அரசு.
மதுபான கடைகளில் ஒரு நேரத்தில் 5 பேருக்கு மேல் நிற்கக்கூடாது, குறைந்தபட்சம் 6 அடி தனி நபர் விலகல் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகளுடன், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 4 ம் தேதி முதல் மதுக்கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதியளித்தபோதும்.

மதுக்கடைகளை திறந்த நாட்டின் தலைநகர் டெல்லி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் இந்த கட்டுப்பாடுகள் காற்றில் பறந்தது. இந்நிலையில், பச்சை மண்டலத்தில் வராத டெல்லியை போல்,  மே 7 முதல் தமிழகத்தில் டாஸ்மாக்குகளை திறக்க மாநில அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் நடந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு அதுபோல் இங்கு நடக்க கூடாது என்பதற்காக, தமிழக அரசு மது விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மது விற்பனை நடைபெறும், இதில், கில்லாடிகள் முதல் கத்துக்குட்டிகள் வரை அனைவரும் மதுபானம் வாங்குவதற்கு தனித்தனி ‘டைம் ஸ்லாட்’ அறிவித்து அசத்தியுள்ளது.

சில மாவட்டங்களில், ஒரு படி மேலே போய், 10 மணி டைம் ஸ்லாட் ஆரம்பிக்கும் முன்னரே காலை 8 மணிக்கு டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டோக்கன் வழங்க கடைபிடிக்கப்படும் விதிமுறை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஊர்களில், டாஸ்மாக் முன் தடுப்பு கட்டை அமைத்து, மதுபிரியர்கள் அந்த தடுப்பு கட்டை வழியே தடை தாண்டும் ஓட்டம் நடத்தி இன்ப உலகம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திராவுக்கு தாவிய காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட வாசிகள், இந்தமுறை சென்னை மாவட்ட குடிமகன்களின் போட்டியை சமாளிக்க வேண்டி இருக்கும் என்பதால் இன்றே அங்குள்ளவர்கள் பலர் சோதனை ஓட்டம் நடத்தி பயிற்சி எடுத்துக்கொண்டனர்.
அப்படி தடை தாண்டி சென்று மது வாங்குபவர்களுக்கு 1 ‘புள்’ கிடைக்குமா அல்லது ஆன்லைனில் பதிவுசெய்து வாங்கினால் 2 ‘புள்’ கிடைக்குமா என்பது நாளை ‘பர்ஸ்ட் ஸ்லாட்’ விற்பனை தொடங்கியவுடன் தெரியவரும்.
வீடியோ இணைப்பு….