லண்டன்:

பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் போரிஸ்ஜான்சனின் கட்சி முன்னிலை வகித்து வருவதால், அவர் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இதையடுத்து, அவரை எதிர்த்து போட்டியிட்ட  எதிர்க்கட்சி தலைவர்  ஜெரமி கார்பின் தனது பதவியை  ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார்.

பிரிட்டனில் பிரெக்சிட்  ஒப்பந்தத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க மறுத்து விட்டதால், அங்கு முன்கூட்டியே  தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தேர்தல் நடைபெற்றது. ஆளுங்கட்சி யான  கன்சர்வேடிவ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான  லேபர்  கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியது.

இந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. 650 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், 333 தொகுதிகளில் போரிஸ் ஜான்சன் கட்சி வெற்றிபெறும் தருவாயில்  முன்னிலையில் இருந்து வருவதாகவும், 43 தொகுதிகளுக்கு முடிவு அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. முக்கிய எதிர்க்கட்சியான ஜெரமி கார்பினின் தொழிலாளர் கட்சி 190  இடங்களை கைப்பற்றும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராவது உறுதியாகி உள்ளது. இதை அவரது கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். போரிஸ் ஜான்சனின் இந்த வெற்றி காரணமாக பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு மக்களியே ஆதரவு உள்ளது தெளிவாகி உள்ளது. இதனால் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரியும் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற போரிஸ் ஜான்சன் அரசுக்கு 322 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஜெரமி கார்பின் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.