முதலாளியிடம் கேட்டது சம்பளம்… பெண்ணுக்குக் கிடைத்தது நாய்க்கடி.. 

முதலாளியிடம் கேட்டது சம்பளம்… பெண்ணுக்குக் கிடைத்தது நாய்க்கடி..

                                                            மாதிரிப்படம்

டெல்லியைச் சேர்ந்த 39 வயதான சப்னா என்ற பெண் ஸ்பா ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.  ஒன்றரை மாதம் அங்கு வேலை பார்த்த அவர், ஊரடங்கு காரணமாக மார்ச் 22ம் தேதியிலிருந்து வேலைக்குச் செல்லவில்லை.  ஆனால் அவரது சம்பளப் பாக்கியை ஸ்பா உரிமையாளரான ரஜ்னி கொடுக்கவே இல்லை.  இந்நிலையில் சப்னாவுக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. அதனால் ரஜினியிடம் தனது சம்பளப் பாக்கியைக் கேட்டுள்ளார்.  அவரும் சப்னாவைத் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

அதன்படி, அவரது வீட்டிற்கு சப்னா சென்ற போது, மீண்டும் வேலையில் சேர்ந்தால் தான் ஊதியத்தைத் தருவேன் என ரஜ்னி கூறியுள்ளார்.  அதற்கு சப்னா கொரோனாவை காரணமாகக் கூறியுள்ளார்.  இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  முடிவில், ரஜ்னி அவர் வளர்த்து வந்த நாயை ஏவி சப்னாவைக் கடிக்க வைத்துள்ளார்.  இதில் படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரது முகம் மற்றும் கழுத்தில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக சப்னா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பளப் பாக்கி கேட்ட ஊழியர் மீது நாயை ஏவித் தாக்கிய குற்றத்திற்காக ஸ்பா உரிமையாளர் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

– லெட்சுமி பிரியா