சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய அணி வெல்வதற்கு பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு மிக முக்கிய காரணம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெறும் 255 ரன்களே எடுக்க, அந்த இலக்கை ஆஸ்திரேலியா எளிதாக தட்டித் தூக்கியது. இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டும் கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

ஆனால், அடுத்தடுத்த 2 போட்டிகளிலும் இந்திய அணி விரைவாக எழுச்சி கண்டது. மொத்தமாக 3 போட்டிகளிலும் டாஸ் தோற்றாலும்கூட இந்திய அணி துவண்டுவிடவில்லை.

மொத்தமாக 4 முழுநேர பவுலர்கள் மற்றும் 1 ஆல்ரவுண்டர் என்ற குழுவை மட்டுமே வைத்துக்கொண்டு இந்திய அணி சாதித்தது. அதுவும் மூன்றாவது போட்டியில் பந்துவீச்சாளர்கள் அதகளம் செய்தனர்.

ஒரு வறண்ட மற்றும் பேட்ஸ்மென்களுக்கு சாதகமான பிட்சில் ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணியை கட்டுப்படுத்துவதெல்லாம் சாதாரண காரியமில்லைதான்! இதை ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச்சே ஒப்புக்கொண்டு இந்திய பவுலர்களைப் பாராட்டினார்.

மொத்தத்தில், இந்திய பவுலிங் படை விரைவாக மீண்டுவிட்டது ‍என்ற கொள்ளலாம். ‍‍அதேசமயம், மிகவும் சவாலான நியூசிலாந்து தொடரில் இந்திய பவுலிங் யூனிட் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.